BJP Alliance: அதிர வைக்கும் பாஜக கூட்டணி.. டெல்லியில் முக்கிய கூட்டம்.. உறுதிசெய்த ஜெ. பி. நட்டா
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட வியூகத்தை அமைத்து, பிரச்னைகளை கையில் எடுத்து, அரசியல் விளையாட்டுகளை ஆடி வருகிறது பாஜக.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளது. அடுத்த தேர்தலில் பாஜக வெற்றிபெறும் பட்சத்தில், நேருவுக்கு அடுத்தப்படியாக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தவர் என்ற பெருமை பிரதமர் மோடியை சாரும். அதை சாத்தியமாக்கதான் பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகள பாஜக ஏற்கனவே செய்ய தொடங்கிவிட்டது.
தேர்தலை சந்திக்க தயாராகி வரும் பாஜக:
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட வியூகத்தை அமைத்து, பிரச்னைகளை கையில் எடுத்து, அரசியல் விளையாட்டுகளை ஆடி வருகிறது பாஜக. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காய்களை நகர்த்தி வருகிறது.
அதேபோல, வரவிருக்கும் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. கூட்டணியை பலப்படுத்தும் முதல் நடவடிக்கையாக டெல்லியில் நாளை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. பி. நட்டா, "பல ஆண்டுகளாக பாஜக கூட்டணியின் எல்லை விரிவடைந்துள்ளது. அதன் தேவை அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் நேர்மறையான தாக்கம் காரணமாக பெரும் உற்சாகம் உள்ளது" என்றார்.
அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்:
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான ஓ.பி.ராஜ்பர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக நேற்று அறிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும், கிழக்கு உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருகிறார் ராஜ்பார்.
பாஜகவை மிக வெளிப்படையாக விமர்சித்தவர்களில் ஒருவராக இருந்தவர். பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சரும், தலித் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவருமான மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜெ.பி. நட்டா அழைப்பு விடுத்திருந்தார்.
மதச்சார்பின்மையை சுற்றி சுழன்று கொண்டிருந்த இந்திய அரசியலை 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்துத்துவ என்ற அரசியல் கொள்கையை சுற்றி சுழல வைத்து வருகிறது பாஜக. கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 2 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, அசுர வளர்ச்சி அடைந்து, 2014ஆம் ஆண்டு தேர்தலில் 282 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றியது.
இப்படிப்பட்ட சூழலில், அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடத்தப்பட உள்ள இந்த தேர்தல், அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.