Viral Video: பெண்ணை தகாத வார்த்தைகளை சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகி... சர்ச்சை வீடியோ
குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் ஒருவரை பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் தியாகி மிரட்டி அவமானப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம் நொய்டாவின் செக்டார் 93ல் உள்ள கிராண்ட் ஓமாக்ஸ் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் ஒருவரை பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் தியாகி மிரட்டி அவமானப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்வீட் செய்த வீடியோவில், வளாகத்தில் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக தியாகி பெண்ணுடன் வாதிடுவதைக் காணலாம்.
வாக்குவாதத்திற்கு மத்தியில், பாஜக கிசான் மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் தியாகி, அந்தப் பெண்ணை தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். வீடியோவில், மற்ற குடியிருப்பாளர்கள் அந்த பெண்ணை பின்னால் இழுப்பதைக் காணலாம்.
இந்த வீடியோ 9,500 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் தியாகியின் நடத்தை குறித்து கோபத்தை வெளிப்படுத்தினர். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மோசமான செயல்களை செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரீகாந்த் தியாகி, செய்திகளில் வருவது இது முதல்முறை அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டில், குடியிருப்பு வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டிடத்தை கட்டியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தியாகிக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
அப்போது, தியாகியின் பாதுகாப்புப் பணியாளர் குடியிருப்பாளர்களை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். இது பற்றிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது.
வீடியோவை காண: https://twitter.com/sevadalor/status/1555535560877699073?s=21&t=-EXHilxFxPK745kMXouMZQ
இதையடுத்து, ஒரு வாரம் கழித்து, நொய்டா ஆணையம் தியாகிக்கு நோட்டீஸ் அனுப்பியது. கிராண்ட் ஓமாக்ஸ் ஹவுசிங் சொசைட்டியின் பூங்கா மற்றும் பொதுவான பகுதியில் அவர் கட்டிய அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் 15 நாட்களுக்குள் அகற்றும்படி உத்தரவிட்டிருந்தது.
கிராண்ட் ஓமேக்ஸ் அபார்ட்மென்ட் உரிமையாளர்கள் சங்கம், நொய்டா ஆணையத்தின் தலைமை நிர்வாக அலுவலரை அணுகி, தியாகி பொதுவான பகுதியில் சுவர் கட்டியது, அடித்தளத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை கட்டியது, எல்லைச் சுவரின் உயரத்தை உயர்த்தியது மற்றும் குடியிருப்பு வளாகத்தின் தன்மையைக் கெடுத்தது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்துதான், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தியாகி மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி, கௌதம் புத் நகர் எஸ்.எஸ்.பி-யிடம் குடியிருப்பாளர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்