Bihar Election Result: முதலமைச்சர் வேட்பாளருக்கே இந்த நிலையா? தேய்ந்துபோகும் தேஜஸ்வி யாதவ்- பின்னடைவு
Bihar Election 2025 Result: முதல் மூன்று சுற்றுகளில் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இருந்த நிலையில், 4ஆம் சுற்றின் முடிவில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் இண்டி கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பிஹார் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. பாஜக, ஜேடியூ கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மற்றும் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி இடையே நேரடிப் போட்டி இருந்தது. இண்டி கூட்டணி மகாகத் பந்தன் (மகா கூட்டணி) என்றும் அழைக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில், மொத்தமாக 66.91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 184 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வெறும் 54 தொகுதிகளிலேயே முன்னிலையில் உள்ளது.
ரகோபூர் தொகுதியில் போட்டி
இதற்கிடையே தேஜஸ்வி பிரசாத் யாதவ், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, பாஜகவைச் சேர்ந்த சதிஷ் குமார் களம் கண்டார்.
முதல் மூன்று சுற்றுகளில் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இருந்த நிலையில், 4ஆம் சுற்றின் முடிவில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். சதிஷ் குமார் 3,016 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 17,599 வாக்குகளைத் தன்வசம் வைத்துள்ளார். தேஜஸ்வி 14,583 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
நிலை என்னவாகும்?
எனினும் இன்னும் பல சுற்று வாக்கு எண்ணிக்கை இருப்பதால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை என்டிஏ கூட்டணி பெற்றுள்ளது. இதுகுறித்தும் தீவிர சிறப்பு சட்டத்திருத்தத்தில் பிஹாரில் சுமார் 17 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது பற்றியும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.






















