Viral Video: "உங்க காலில் விழுகிறேன்.. வேலைய முடிங்க" ஐஏஎஸ் அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்வர் நிதிஷ்!
சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கெஞ்சி கொண்டுள்ளார். காலில் கூட விழுகிறேன் என அதிகாரியிடம் அவர் சொன்னது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
![Viral Video: Bihar CM Nitish Kumar urges IAS officer to expedite roadwork in Patna says will touch your feet Viral Video:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/10/8bb29ffb86bb73c0f2f7d106d87c0ce11720617721803729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான இவர், பிகார் மாநில முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவி வகித்து வருகிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்து வருகிறார்.
ஐஏஎஸ் அதிகாரியிடம் கெஞ்சிய முதல்வர் நிதிஷ்: கடந்த 2000ஆம் ஆண்டு, மார்ச் 3 முதல் மார்ச் 10 வரையிலும், 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலும், 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் முதலமைச்சராக இருக்கிறார். பாஜக, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் என மாறி மாறி கூட்டணி வைத்துள்ளார்.
தற்போது, பாஜகவின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பாட்னாவில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் முதலமைச்சர் நிதிஷ் குமார் கெஞ்சி கேட்டு கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு படி மேலே சென்று "காலில் கூட விழுகிறேன். சரியான நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும்" என ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் நிதிஷ் குமார் கெஞ்சி கேட்டு கொண்டுள்ளார். ஜேபி கங்கா பாதையை கைகாட்டில் இருந்து (12.1 கிமீ) கங்கன் காட் வரை (15.5 கிமீ) நீட்டிக்கும் மூன்றாவது கட்டம சாலை பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
#WATCH | Bihar CM Nitish Kumar urges an IAS officer to speed up the work of extension of JP Ganga Path up to Kangan Ghat in Patna; tells him "I touch your feet, please finish the work on time." pic.twitter.com/82NoLnc1oO
— ANI (@ANI) July 10, 2024
பீகாரில் இடிந்து விழுந்த பாலங்கள்: இந்த நிகழ்ச்சியில், நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பீகாரில் கடந்த சில நாள்களாகவே பாலங்கள் இடிந்து விழுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் கிஷன்கஞ்ச், அராரியா, மதுபானி, கிழக்கு சம்பாரண், சிவன் மற்றும் சரண் ஆகிய இடங்களில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. சிவானில் மட்டும் ஒன்பது பாலங்கள் இடிந்து விழுந்தன.
அலட்சியமாக செயல்பட்டதாக நீர்வளம் மற்றும் ஊரகப் பணிகள் துறையைச் சேர்ந்த 15 பொறியாளர்களை பீகார் அரசு, கடந்த ஜூலை 5ஆம் தேதி இடைநீக்கம் செய்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)