(Source: Poll of Polls)
Bihar Election 2025: உங்க ரேஞ்சுக்கு 50 போதும்.. காங்., லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் தேஜஸ்வி - பீகார் தேர்தல்
Bihar Assembly Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என, தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாம்.

Bihar Assembly Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்க தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டுள்ளாராம்.
பீகார் சட்டமன்ற தேர்தல்:
பீகார் சட்டமன்ற தேர்தல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. நிதிஷ்குமார் - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இங்கு நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடஒதுக்கீட்டில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. கட்சிகளுக்கு இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு 50 தொகுதிகள் மட்டுமே?
அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக கருதப்படுகிறார். அவரே கூட்டணி கணக்குகளை இறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 50 முதல் 55 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, இந்த முடிவில் திட்டவட்டமாக இருப்பதாகவும் தேஜஸ்வி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?
இடதுசாரிக் கட்சிகள் கடந்த தேர்தலைப் போலவே சுமார் 25 இடங்களில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தேர்தலைப் போலவே, இடதுசாரிகளின் எண்ணிக்கை மாறாமல் இருப்பதை உறுதி செய்வதாக ஆர்ஜேடி தரப்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதுபோக, விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான முகேஷ் சாஹ்னி, 35-40 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளாராம். ஆனால், எந்த சூழ்நிலையிலும் அவருக்கு 20 இடங்களுக்கு மேல் வழங்க ஆர்ஜேடி விரும்பவில்லையாம். இந்த முடிவுகள் தான் தற்போது, தொகுதிப் பங்கீட்டை இழுபறியாக்கியுள்ளதாம்.
முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு எப்போது?
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டதோடு, 17 மாநிலங்கள் துணை முதலமைச்சராக இருந்தபோது, கல்வி, சுகாதாரம், சாலை, வேலைவாய்ப்பு என பல்வேறு அடிப்படை அம்சங்களின் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்ததால், தேஜச்வி யாதவ் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவராகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு போட்டியாக கூட்டணி கட்சிகளால் வேறு யாரையும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பில்லை. எனவே, தொகுதிப் பங்கீடு இறுதி செய்த உடனேயே, எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கூட்டணி எப்படி?
இதனிடையே, ஆளுங்கட்சியின் கூட்டணி சார்பில் நிதிஷ்குமாரே மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்த பாஜக - நிதிஷ் கூட்டணி அண்மைக்காலமாக ஏராளமான நிதியுதவி திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆளும் கட்சியின் மீதுள்ள அதிருப்தியை தணிக்க முடியும் என நம்பியுள்ளதாம். இதுபோக ஏராளமான உட்கட்டமைப்பு திட்டங்களும், கடந்த சில மாதங்களில் மத்திய அரசால் பீகாருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இரண்டு பிரதான கட்சிகளும் தலா சுமார் 100 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என கூறப்படுகிறது.





















