"நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க முடியாது" பாஜக அரசின் அடுத்த சர்ச்சை.. அதிர்ச்சியில் முஸ்லிம்கள்!
வெள்ளிக்கிழமைகளில் நமாஸ் செய்ய இஸ்லாமிய எல்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட 2 மணி நேர இடைவேளையை ரத்து செய்ய அஸ்ஸாம் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவையில் நமாஸ் செய்ய இஸ்லாமிய எல்எல்ஏக்களுக்கு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை பாஜக அரசு ரத்து செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்ச்சையான முடிவுகளை எடுக்கும் பாஜக அரசு: பாஜக அரசு எடுக்கும் முடிவுகள் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. வேளாண் சட்டம் (தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது) தொடங்கி சமீபத்தில் உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட மாநில பொது சிவில் சட்டம் வரை பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் 'லவ் ஜிகாத்'க்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் மாநில பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர்கள் எழுதிய புத்தகங்களைத் தங்கள் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு மத்தியப் பிரதேச பாஜக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, அஸ்ஸாம் பாஜக அரசு சர்ச்சையான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சட்டப்பேரவையில் நமாஸ் செய்ய இஸ்லாமிய எல்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட 2 மணி நேர இடைவேளையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
"நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க முடியாது" முஸ்லிம் எம்எல்ஏக்கள் நமாஸ் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அஸ்ஸாம் சட்டசபை வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் ஒத்திவைக்கப்படும். ஆனால், இடைவேளை இல்லாமல் மற்ற நாள்களை போன்று தொடர்ந்து செயல்பட சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "அஸ்ஸாம் சட்டப் பேரவை உருவாக்கப்பட்டதிலிருந்து, முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு வசதியாக வெள்ளிக்கிழமையன்று பேரவையின் கூட்டம் காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படும்.
மதிய உணவுக்கு பிந்தைய அமர்வில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகை முடிந்து திரும்பி வந்த பிறகே, சட்டசபை அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும். ஆனால், மற்ற நாட்களில் எல்லாம், மத நோக்கங்களுக்காக சபை ஒத்திவைக்கப்படாமல் அதன் நடவடிக்கைகளை நடத்தி வந்தது.
சபாநாயகர் ஸ்ரீ பிஸ்வஜித் டைமரி, இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இது இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஜாகீர் உசேன் சிக்தர் கூறுகையில், "சட்டப்பேரவையில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம். போக்கு. அவர்கள் அதை மாற்ற முடிவு செய்தனர். ஆனால், முடிவு எடுப்பதற்கு முன்பு ஆலோசனை செய்யப்பட்டதா? இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்" என்றார்.