ராணுவத்தை சுற்றி வளைத்த பெண்கள் அடங்கிய கும்பல்.. சிக்கி கொண்ட அப்பாவி மக்கள்.. நடந்தது என்ன..?
பெண்கள் தலைமையில் 1,200 பேர் அடங்கிய கும்பல் இதம் கிராமத்திற்கு சென்று இந்திய ராணுவத்தை சுற்றிவளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் தொடரும் கலவரம்:
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடந்து முடிந்து அனைத்து கட்சி கூட்டத்தில், மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தகவல் வெளியானது. மணிப்பூர் பிரச்னை நாளுக்கு நாள் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராணுவத்தை சுற்றி வளைத்த பெண்கள் அடங்கிய கும்பல்:
இந்த நிலையில், பெண்கள் தலைமையில் 1,200 பேர் அடங்கிய கும்பல் இதம் கிராமத்திற்கு சென்று இந்திய ராணுவத்தை சுற்றிவளைத்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட ஒரு நாள் இந்த பிரச்னை நீடித்தது. இறுதியில், பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்களின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்று எண்ணி பிரிவினைவாதிகளை விடுவிக்க ராணுவம் முடிவு செய்தது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பெண்கள் தலைமையில் வந்த கும்பலுக்கு எதிராக படையை பயன்படுத்துவதன் உணர்திறனைக் கருத்தில் கொண்டு, அத்தகைய நடவடிக்கையால் ஏற்படக்கூடிய ஆபத்தை கருத்தில் கொண்டு, 12 பிரிவினைவாதிகளையும் உள்ளூர் தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்தின் மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தும் முதிர்ச்சியான முடிவை எடுத்ததற்காக பொறுப்பாக செயல்பட்ட தளபதியை ராணுவம் பாராட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 12 பிரிவினைவாதிகள், கங்லீ யவோல் கண்ண லுப் என்ற மெய்தி போராளி குழுவை சேர்ந்தவர்கள். இந்த குழுதான், கடந்த 2015ஆம் ஆண்டு 6 டோக்ரா பிரிவின் பதுங்கியிருந்து பல தாக்குதல்களில் ஈடுபட்டது.
வன்முறைக்கு சதிச் செயல் காரணமா?
மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.