Exclusive: Amit Shah Interview: குஜராத்தில் வெற்றிபெற்றால் இவர்தான் அடுத்த முதலமைச்சர்... அமித்ஷா ஆருடம்!
முன்னதாக விஜய் ரூபானியின் திடீர் ராஜினாமாவுக்குப் பிறகு 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தின் பதினேழாவது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பூபேந்திர படேலே மீண்டும் முதலமைச்சராக நீடிப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏபிபி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் சிஆர் பாட்டீல் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இந்த ஊகங்களுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பாஜகவின் பிரச்சார முகமாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமித் ஷா, “பூபேந்திர படேல் தலைமையில் தான் கட்சி தேர்தலை சந்திக்கும், வாக்கு கோரும். குஜராத் மக்கள் பூபேந்திர படேல் ஆற்றிய பணிகளின்படி வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வார்கள். மாற்றத்தைக் கொண்டு வரத்தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜய் ரூபானியின் திடீர் ராஜினாமாவுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தின் பதினேழாவது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்.
குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு எதிரான போக்கை முறியடிப்பதற்காக பூபேந்திர படேல் முதலமைச்சராக பொறுப்பேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
View this post on Instagram
பூபேந்திர படேல் இதற்கு முன்பு அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (AUDA) தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இதுவரை அமைச்சர் பதவி எதுவும் வகித்ததில்லை. இந்நிலையில், குஜராத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2 கட்டத் தேர்தல்
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (நவ.03) அறிவித்தது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று (நவ.03) தேர்தலில் போட்டியிடும் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது. பாஜகவும் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது. குஜராத் தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சி விரைவில் கூட்டத்தை கூட்டவுள்ளது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.