Childrens Missing: சட்டவிரோதமான காப்பகம்! மாயமான 26 சிறுமிகள் - மீட்கப்பட்டார்களா? மத்திய பிரதேசத்தில் பகீர்!
மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன 26 சிறுமிகள்:
மத்திய பிரதேச மாநிலம் போபால் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குழந்கைள் காப்பகம் நடத்தப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (NCPCR) தகவல் கிடைத்துள்ளது. குழந்தைகள் காணாமல் போனதாக தகவல் வந்ததை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கனுங்கோ, பர்வாலியா பகுதியில் உள்ள காப்பகத்துக்கு சென்று சோதனையிட்டார்.
அந்த சோதனையில், சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்து 8 முதல் 18 வயதுக்குள் இருக்கும் 26 குந்தைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. மேலும், 68 சிறுமிகள் அங்கு இருந்ததாகவும், அதில் 28 சிறுமிகள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுமிகள் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருக்கும் சிறுமிகளுக்கு கிறிஸ்தவ மதத்தை கடைபிடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மீட்கப்பட்ட 26 சிறுமிகள்:
வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் 2 பேர் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக கூறி, பிரிஜேந்திர பிரதாப் சிங் மற்றும் கோமல் உபாத்யாய் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சுனில் சோலங்கி மற்றும் அத்துறையின் உதவி இயக்குநர் ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து NCPCR தலைவர் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் குழந்தைகள் காப்பகத்தை இயக்க அனுமதித்துள்ளனர்.
குழந்தைகள் காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. இரண்டு பெண் பாதுகாவல்களும், இரவில் இரு ஆண் காவலர்கள் தங்கி இருக்கின்றனர். காணாமல் போன அனைத்து சிறுமிகளும் குழந்தைகள் நலக் குழுவின் உத்தரவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
காணாமல் போன 26 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அடம்பூர் சாவ்னி பகுதியில் 10 சிறுமிகளும், சேரிகளில் 13 பேரும், டாப் நகரில் இரண்டு பேரும், ரைசனில் ஒரு சிறுமியும் மீட்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விக்ரம்சிங் கூறுகையில், "சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்த 41 சிறுமிகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அனைத்து சிறுமிகளும் பத்திரமாக உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.