"இப்போதான் மூச்சே விட முடியுது" சென்னை, மதுரையில் மேம்பட்டுள்ள காற்றின் தரம்.. மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் தரம் மேம்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய, மாநில மற்றும் நகர அளவிலான தூய்மையான காற்று செயல் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 130 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் 2019 ஜனவரியில் தேசிய தூய்மை காற்று திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சி நகரங்களில் காற்றின் தரம் எப்படி உள்ளது?
இத்திட்டம் மூலம் 2025-26-க்குள் பிஎம் 10 அளவை 40% வரை குறையும் அல்லது தேசிய தரத்தை (60 மைக்ரோகிராம் கன மீட்டர்) அடையமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 2019-20-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.16,539 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழுவின் மில்லியன் பிளஸ் நகர சவால் நிதியின் கீழ் 48 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் நகர்ப்புற கூட்டுப்பகுதிகளுக்கு நகர செயல் திட்டங்களின் கீழ் காற்றின் தர மேம்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக செயல்பாட்டுடன் இணைந்த ஊக்கத்தொகையாக இதுவரை ரூ.9595.66 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்த பதில்:
கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டின்படி, 130 நகரங்களில் 97 நகரங்களில் 2017-18 உடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் பிஎம்10 செறிவுகளின் அடிப்படையில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017-18-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24 ஆம் ஆண்டில் 55 நகரங்கள் பிஎம் 10 அளவுகளில் 20% மற்றும் அதற்கு மேல் குறைப்பை எட்டியுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் தரம் மேம்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!