Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
அகமதாபாத் விமானம் விழுந்து சிதறிய மருத்துவ விடுதியில் நூலிழையில் உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் என்ன நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உடல் கருகி தீக்கிரையாகிய நிலையில், விமானம் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொத்தம் 274 பேர் உயிரைப் பறித்த இந்த விமான விபத்தின்போது மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாந்த் யூ டியூப்பில் பேட்டி அளித்தார். அவர் அங்கு என்ன நடந்தது? எப்படி தப்பினார்? என்பது குறித்து விளக்கியுள்ளார்.
கரும்புகையுடன் பரவிய தீ:
அவர் கூறியதாவது, நான் விமானம் வந்து மோதிய கட்டிடத்தின் பக்கத்து கட்டிடத்தில்தான் இருந்தேன். நாங்கள் இருக்கும் கட்டிடத்தில் முதுகலை மருத்துவர்கள் அவர்களின் குடும்பத்துடன் தங்கியிருப்பார்கள். நாங்கள் இருக்கும் இடம் குடும்பங்கள் இருக்கும் இடம். விமானம் வந்து விழுந்த இடம் இளங்கலை மாணவர்கள் இருந்த கேன்டீன். சரியாக அது சாப்பாட்டு நேரம்.
அதனால், மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 1.40 அந்த மாதிரி இடி சத்தம் மாதிரி கேட்டது. 5 நொடி கூட இல்லை. கட்டிடத்தை சுற்றி புகை சூழ்ந்துவிட்டது. நெருப்பும் பரவ ஆரம்பித்து விட்டது. அறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்ப்பதற்குள் கரும்புகை மட்டும்தான் இருந்தது.
கீழே குதித்து தப்பினேன்:
என்ன செய்வதென்றே தெரியவில்லை. 5வது மாடியில் இருந்து கீழே ஓடி வர ஆரம்பித்தேன். ஓடி வர ஓடி வர நெருப்பும் பரவத் தொடங்கியது. கீழே இருந்த கார், பைக் எல்லாம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. கீழே தரைக்கு வர முடியவில்லை. வெளியில் இருந்து மக்கள் வெளியில் வருமாறு கூச்சலிட்டனர். இதனால், முதல் மாடியில் இருந்து கீழே குதிச்சு தப்பினேன். வெளியில் இருந்து 5 நிமிஷம் கழிச்சுதான் விமானம் விழுந்ததே தெரிஞ்சது.
எப்படி உள்ளே போயி காப்பாத்துறதுனு கூட யோசிக்க முடியல. அதுக்கு அப்புறம்தான் தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் காப்பாத்த வந்தார்கள். விமானத்தோட லைட், இறகுகள் எல்லாம் சிதறி சுத்தி இருந்த 100, 200 மீட்டர் கட்டிடத்துல எல்லாம் விழுந்துருச்சு. அப்படிதான் நாங்க இருந்த பில்டிங்ல பட்டு தீப்பிடிச்சது.
சிறு குழந்தைகள் இறப்பா?
விமானம் வெடிக்கவும் சுத்தி இருந்த மரங்கள், ஜன்னல்கள், துணிகள் எல்லாம் தீப்பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதுனால யோசிக்க கூட முடியவில்லை. சாப்பிட்ட கையோட குதிச்சு தப்பிச்சுட்டேன். இறந்து போன எம்பிபிஎஸ் மாணவர்கள் 19, 20 வயசுதான் இருப்பார்கள். நிறைய பசங்க ஐசியு-வில் இருக்காங்க. நாங்க இருந்தா குடியிருப்புலயும் சின்னக்குழந்தைங்க, வயசானவங்க இறந்ததா தகவல் சொல்றாங்க. ஏதும் உறுதியா தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கோர விபத்து நடப்பாண்டின் மிகப்பெரிய துக்க நிகழ்வாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் உடல்களை ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.





















