தலைக்கேறிய போதை.. சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்.. ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் சர்ச்சை!
ஏர் இந்தியா விமானத்திற்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீது மதுபோதையில் இருந்த ஒருவர் சிறுநீர் கழித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா விமானம்:
சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, ஏர் இந்தியா விமானத்திற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.
இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. விமானத்தில் நாள்தோறும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், சக பயணி மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
போதையில் இந்தியர் செய்த காரியம்:
டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில்தான் இப்படி நடந்துள்ளது. இந்த விஷயம், விமான நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பாங்காக்கில் விமானம் தரையிறங்கிய பிறகு, பாதிக்கப்பட்ட பயணிக்கு உதவ ஏர் இந்தியா முன்வந்துள்ளது. ஆனால், அந்த உதவியை ஏற்க மறுத்திருக்கிறார் அந்த பயணி.
இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், அமைச்சகம் அவற்றைக் கவனத்தில் எடுத்து கொள்கிறது. விமான நிறுவனத்திடம் பேசுவோம். ஏதேனும், தவறு நடந்தால் நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மது அருந்திய பிறகு சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா, கடந்த 2023 ஆம் ஆண்டு, சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அவரைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

