Harsha’s murder: அதிர்ச்சி.. இந்தியாவை உலுக்கிய கொலை! சிறையில் இருந்து இன்ஸ்டாகிராம் வீடியோ..
இந்தியாவையே உலுக்கிய கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் மிகவும் சொகுசாக இருப்பதுபோன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
பஜ்ரங் தளச் செயற்பாட்டாளர் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்துகொண்டே இன்ஸ்டாகிராமில் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஜ்ரங் தளச் செயற்பாட்டாளரான ஹர்ஷா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கர்நாடகாவில் பெரிய வன்முறைக்கு வித்திட்டது. இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில் கொலை தொடர்பாக 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவையே உலுக்கிய கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் மிகவும் சொகுசாக இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சிறை வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் குற்றம் சாட்டப்பட்டவரில் இருவர் செல்போன் பேசுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
#FIR registered against 11 accused in @BajrangDalOrg member #Harsha murder case for making #videoreels inside highly secured #Parappana agrahara #Bengaluru central prison. The accused also can be seen talking to their associates over video. Probe ordered by #Karnataka govt. pic.twitter.com/Rr2j5JfxCS
— Imran Khan (@KeypadGuerilla) July 4, 2022
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, குற்றவாளிகளுக்கு சிறைக்குள் செல்போன் எப்படி கிடைத்தது என சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை வளாகத்தில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. ஆதாரங்களை அழிக்கவும், விசாரணையின் கோணத்தை மாற்றவும் ஏதேனும் முயற்சிகள் நடக்கிறதா எனவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஹர்ஷாவின் குடும்பத்தினர் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஹர்ஷாவின் சகோதரி, "இந்த விவகாரத்தில் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருடன் எப்படி பேசுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்களுக்கு எல்லா ஆதரவும் உள்ளது. நாங்கள் சகோதரனை இழந்து தவிக்கிறோம். இந்த சொகுசுக்கு காரணமான சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக நாங்கள் உணர்வதாக ஹர்ஷாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர், சிறைக்குள் இவ்வளவு ஆடம்பரம் இருக்குமென்றால் அரசாங்கமே அவரை விடுவிக்கவும் வாய்ப்புண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.