Mizoram Exit Poll: மிசோரத்தில் தொடரும் மாநில கட்சிகளின் ஆதிக்கம்! சர்ப்ரைஸ் கொடுத்த சோரம் மக்கள் இயக்கம்!
Mizoram Exit Poll Results 2023: மிசோரத்தில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே தொடரும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த மிசோரமுக்கு கடந்த 1987ஆம் ஆண்டு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை, காங்கிரஸ் கட்சியும் மிசோ தேசிய முன்னணியும்தான் அம்மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இச்சூழலில், மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
மிசோரத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
மிசோரத்தை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லால் தன்ஹாவ்லா, முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். ஆனால், முன்னாள் நிதியமைச்சர் லால்சவ்தா தலைமையில் காங்கிரஸ் கட்சி, இந்த முறை, தேர்தலை சந்திக்கிறது. அதேபோல, மிசோ தேசிய முன்னணி அக்கட்சியின் தலைவர் ஜோரம்தங்காவின் தலைமையில் தேர்தலில் களம் காண்கிறது. இவர்தான் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
1986ஆம் ஆண்டுக்கு பிறகான காலத்தில், 20 ஆண்டு காலகாலம் காங்கிரஸ் கட்சியும் 17 ஆண்டுகளுக்கு மேல் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி நடத்தியுள்ளன.
முதலமைச்சர் போட்டியில் செம்ம ட்விஸ்ட்:
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, 15 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 12 முதல் 18 தொகுதிகளையும் காங்கிரஸ், 2 முதல் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், 34.7 சதவிகித வாக்குகளை மிசோ தேசிய முன்னணி பெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ், 30.1 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டது. இந்த தேர்தலில், எந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு ஊழல் மற்றும் உள்ளுர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவோம் அளிப்போம் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, யார் முதலமைச்சராக வர வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவுக்கு ஆதரவாக 32.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய முதலமைச்சரும் மிசோ தேசிய முன்னணியின் தலைவருமான சோரம்தங்காவுக்கு ஆதரவாக 27.2 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆட்சி மாற்றம் நடக்க வேண்டுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, தாங்கள் கோபமாக இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் நடந்தே தீர வேண்டும் என 50 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது கோபமாக இருக்கிறோம், ஆனால், ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 15.7 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது கோபம் இல்லை, ஆட்சி மாற்றம் நடக்க விரும்பவில்லை என 34.3 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.