24 எம்பிக்கள் இடைநீக்கம்... எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?
அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இதுவரை 24 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் இணைந்துள்ளார்.
அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இதுவரை 24 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் இணைந்துள்ளார். மாநிலங்களவை தலைவர் மீது காகிதத்தை வீசியதாக இந்த வாரம் முழுவதும் அவர் நாடாளுமன்ற செயல்பாடுகளில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்கள் 20 பேர் உள்பட 24 பேர் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3:42 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, சஞ்சய் சிங்கும் இன்னும் சில உறுப்பினர்களும் குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 28 பேர் உயிரிழந்திருப்பது குறித்த பிரச்சினையை எழுப்பக் கோரி முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவை தலைவர் அவரைத் அவரது இடத்திற்கு செல்ல சொன்ன போது, அவர் காகிதங்களைக் கிழித்து நாற்காலியின் மீது வீசியதாக மாநிலங்களவை தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
मुझे भले ही मोदी जी ने ससपेंड कर दिया, मगर गुजरात में ज़हरीली शराब से हुई 55 मौतों का जवाब मांगता रहूंगा , लड़ता रहूंगा । अभी मैं सदन में ही हूँ। pic.twitter.com/nZl6QW63D5
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) July 27, 2022
இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள சஞ்சய் சிங், "குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததற்கு பதில் கிடைக்கும் வரை கேள்வி எழுப்புவேன். நாடாளுமன்றத்தில்தான் தொடர்ந்து இருக்கிறேன்" என்றார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், "மோடி என்னை சஸ்பெண்ட் செய்திருக்கலாம். ஆனால் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததற்கு பதில் கேட்டு தொடர்ந்து போராடுவேன்" என பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைத் தவிர திரிணாமூல் காங்கிரஸின் 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர் உள்பட எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சங்சய் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, மாநிலங்களவையில் இடையூறு செய்ததாகக் கூறி 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசி பாஜகவின் பியூஷ் கோயல், இந்த முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாகக்” கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்து நாடாளுமன்றத்திற்கு திரும்பியதும் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது என மாநிலங்களவை பாஜக குழு தலைவர் கோயல் தெரிவித்தார்.
இந்த வார தொடக்கத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் எச்சரிக்கையையும் மீறி, அவைக்குள் பதாகைகளை ஏந்தியதாக நான்கு காங்கிரஸ் எம்பிக்கள், ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடையும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த பல நாட்களாக கோரி வருகின்றனர். ஜூலை 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்