மகாராஷ்டிரா: பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞரை விடுவித்த போக்சோ நீதிமன்றம்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞரை விடுவித்தது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 27 வயது இளைஞரை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் குற்றச்சாட்டை நிரூபிக்க இந்த வழக்கு தவறிவிட்டது என்றும் கூறிப்பிட்டு விடுவித்துள்ளது.
சிறப்பு (போக்சோ) நீதிபதி வி.வி.விர்கார் இந்த உத்தரவை மார்ச் 6 அன்று பிறபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குரைஞரின் கூற்றுப்படி, நாந்தேட்டைச் சேர்ந்த நபர் அடிக்கடி தானேவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும், அங்கு சிறுமியுடன், (அப்போது 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்) பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. டிசம்பர் 2017 இல், அவர்கள் நாந்தேடுக்கு சென்றுள்ளனர், அங்கு அந்த நபர் தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டது.
நாந்தேடுக்கு சென்ற சிறுமி வீடு திரும்பிய போது அவரின் பெற்றோர் விஷயம் அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த சிறுமியின் தந்தை அவர்களது உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த நபருடன் தானாக சுய விருப்பத்துடன் சென்றதாக வழக்கு விசாரணையின் பொது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அந்த நபர் சிறுமியை கடத்தியதாக கூறப்படுவது ஏற்புடையதல்ல என நீதிபதி கூறினார். மேலும் பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் அந்த வருடத்தில் சிறுமி மைனர் என்பதற்கும் போதிய ஆதாரம் இல்லை என கூறினார். தற்போது இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் ஒருமித்த விருப்பத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர் என நீதிபதி குறிப்பிட்டார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது என்று கருதப்பட்டாலும், அவருடைய செயலின் விளைவுகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் இருந்துள்ளார் என்று நீதிமன்றம் கூறியது. “குற்றம் சாட்டப்பட்டவர் ஓடிப்போவது அல்லது உடலுறவு வைத்துக்கொள்வது IPC மற்றும் POCSO சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றமாகும் என்று கூற முடியாது என குறிப்பிட்டு அந்த நபரை விடுவித்தார். அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.