75 Rupee Coin: வருகிறது புதிய 75 ரூபாய் நாணயம்... மத்திய அரசு அறிவிப்பு... எப்படி இருக்கும் தெரியுமா?
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இவ்விழாவை நினைவு கூறும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது.
75 Rupees Coin : மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இவ்விழாவை நினைவு கூறும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்:
பாஜக அரசாங்கம் இந்த மாதத்துடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதால், மே 28ஆம் தேதி (நாளை மறுநாள்), புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2014ஆம் ஆண்டு, மே 26ஆம் தேதி, மோடி பிரதமராக பதவியேற்றார். 1,224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை காட்சிப்படுத்த நாடாளுமன்றத்தில் பெரிய அரசியலமைப்பு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, உணவு வழங்கும் பகுதி, போதுமான வாகன நிறுத்துமிடத்தை புதிய நாடாளுமன்றம் கொண்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. இது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என அதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் 384 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நாணயம் வெளியீடு
இந்நிலையில், இந்த விழாவை நினைவு கூறும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 25ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், (Issue of commerative coin on the occasion of inaguration of new parliment building) விதிகள் 2023 இன் கீழ் நாணயம் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எப்படி இருக்கும்?
- 75 ரூபாய் நாணயம், 44 மில்லி மீட்டர் விட்டமும், 35 கிராம் எடையும் கொண்டுள்ளது.
- 75 ரூபாய் நாணயத்தின் விளிம்புகளில் 200 சிறு சிறு பற்கள் இருக்கும்.
- இந்த 75 ரூபாய் நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் என்ற உலோக கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோகத் தூணில் உள்ள சிங்க முகங்களும் அதன் கீழே ’சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கும்.
- 75 ரூபாய் நாணயத்தின் பின்புறம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படம், அதன் கீழே 2023 என்று பொறிக்கப்பட்டிருக்கும்.
- நாடாளுமன்ற கட்டிடத்தின் கீழே, 'சன்சாத் சங்குல்' என தேவநாகிரி எழுத்துகளிலும், ’Parliment Complex' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
- நாணயத்தின் முன்புறம் அசோக சின்னத்தின் கீழே 75 ரூபாய் என்பதை குறிப்பிடும் வகையில் ரூபாய் சின்னமும், அருகே 75 எனவும் பொறிக்கப்பட்டிருக்கும்.
- மேலும், நாணயத்தின் இடது பக்கத்தில் பாரதம் என்று தேவநாகிரி எழுத்திலும், வலது பக்கத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.