6 ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்தார் பிபின் ராவத்.. அன்று நடந்தது என்ன?
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஹெலிகாப்டர் விபத்திலிருந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர்.
விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், நாட்டில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கும் பிபின் ராவத் ஆறு ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி (அப்போது பிபின் ராவத் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தார்) தன்னுடைய சீட்டா ஹெலிகாப்டரில் நாகாலாந்தின் திமாபூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த பிபின் தற்போதைய விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார் என்னும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்ந்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: CT Ravi | வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளிருக்கும் எதிரியால் அதிக ஆபத்து: சி.டி.ரவி ட்வீட்.. குஷ்பு ரீ ட்வீட்
Watch Video | ''மேகமூட்டமெல்லாம் இல்ல.. தாழ்வா பறந்துச்சு'' - நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்