"3 நாட்களில் 44 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்.." - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டு இருந்ததார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
உச்சநீதிமன்ற - மத்திய அரசு மோதல்:
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நீடித்து வருகிறது.
44 நீதிபதிகள்:
இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், நிலுவையில் உள்ள நீதிபதிகளின் நியமனங்களுக்கு முடிந்த அளவுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
நீதிபதிகள் நியமனத்தை தாமதிக்காமல் இந்தியாவின் சட்ட விதிகளை பின்பற்றுமாறும் உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, "மூன்றே நாள்களில் உயர் மட்ட நீதித்துறைக்கு 44 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்" என உறுதி அளித்தது.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கழிஞர் ஆர். வேங்கடரமணி, "காலக்கெடுவைப் பின்பற்றி, அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ள உயர் நீதிமன்றங்களின் 104 பரிந்துரைகளில் 44 பரிந்துரைகள் இந்த வார இறுதிக்குள் செயல்படுத்தப்பட்டு உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்" என்றார்.
மாற்றுக்கருத்து:
அப்போது, உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்த 5 நீதிபதிகளின் நியமனங்கள் குறித்து நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஏ.எஸ். ஓகா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தனக்கு மாற்று கருத்து இருப்பதாக பதில் அளித்தார்.
"நீங்கள், இதை சிறிது காலம் தள்ளிப் போட முடியுமா? எனக்கு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது" என அவர் கூறினார். இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் உள்பட 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்தது இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம். சமீபத்தில், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.