4 States By Election: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி; 4 மாநிலங்களில் பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை
குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஆம் ஆத்மி. முழு விவரங்களை காணலாம்.

குஜராத், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில், இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், 2 இடங்களில் முன்னிலை பெற்று, பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. வாக்கு எண்ணிக்கை விவரங்களை தற்போது பார்க்கலாம்.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக, 17-ம் தேதி தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், அந்த 5 தொகுதிகளுக்காக சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்படும் வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குஜராத்தின் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி
குஜராத்தில் உள்ள கடி மற்றும் விசாவதர் தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, கடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திரகுமார் தனேஷ்வர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸின் ரமேஷ்பாய் சாவ்தா பின்தங்கினார்.
மற்றொரு தொகுதியான விசாவதரில், ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, பாஜகவின் கிரித் படேல் பின்தங்கினார். 18 சுற்றுகளின் முடிவில், கோபால் இத்தாலியா 65,295 வாக்குகளும், கிரித் படேல் 51,222 வாக்குகளை பெற்றதாகவு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரளா நிலம்பூரில் காங்கிரஸ் வெற்றி
இதேபோல், கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாதன் ஷௌகத் முன்னிலையில் இருந்த நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவரிடம், சிபிஐ-எம் வேட்பாளர் எம். சுவராஜ் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
பஞ்சாப் லூதியானா மேற்கு தொகுதியின் நிலவரம்
இந்நிலையில், பஞ்சாப்பில் உள்ள லூதியானா மேற்கு தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா முன்னிலையில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் ஆஷு பின்தங்கியுள்ளார்.
மேற்குவங்கம் காலிகஞ்ச் தொகுதி நிலவரம்
இதேபோல், மேற்கு வங்கத்தில் உள்ள காலிகஞ்ச் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அலிஃபா அகமது முன்னிலையில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, பாஜக-வின் ஆஷிஷ் கோஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆம் ஆத்மி
இடைத்தேர்தல் நடைபெற்ற மொத்தம் 5 தொகுதிகளில், ஒரு தொகுதியை கைப்பற்றி, பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஆம் ஆத்மி. அங்கு மற்றொரு தொகுதியை பாஜக கைப்பற்றியத. கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், மற்ற தொகுதிகளை பொறுத்தவரை, ஆம் ஆத்மி, டிஎம்சி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளன.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில், இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடித்து அசத்தியுள்ளது ஆம் ஆத்மி. அக்கட்சியின் தலைவர்கள் மீது வழக்குகளை போட்டு, தண்டனை வாங்கிக் கொடுத்தது பாஜக அரசு. ஆனாலும், தேர்தலில் அவர்களது செல்வாக்கு குறையாமல் இருப்பது, முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இறுதி முடிவு என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















