பயிற்சிக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் கைது
ஜெய்ப்பூரில் 17 வயது சிறுமி டென்னிஸ் பயிற்சியாளரால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஜெய்ப்பூரில் உள்ள சவைமேன் சிங் மைதானத்தில் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்த குராங் நால்வயா என்பவர் தன்னிடம் டென்னிஸ் பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் சிறுமிக்கு மேலும் வாய்ப்புகளை தருவதாகவும், சிறந்த வீராங்கனையாக அங்கீகரிப்பேன் எனக் கூறி ஏமாற்றியும், மிரட்டியும் சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து எதுவும் தகவல் வெளியாகாத நிலையில், சிறுமியின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் பலமுறை டென்னிஸ் பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஜோதி நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், டென்னிஸ் பயிற்சியாளரை கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் கூட உதய்பூருக்கு போட்டிக்கு செல்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை சிறந்த வீராங்கனையாக மாற்றவே பயிற்சியாளர் உழைப்பதாக நம்பிய பெற்றோர் அவர் மீது சந்தேகம் அடையவில்லை. ஆனால் சிறுமியின் செயல்பாடுகளால் தற்போது பயிற்சியாளர் சிக்கியுள்ளார். பயிற்சியாளர் குறித்து முன்னதாக ஏதும் புகார்கள் வந்துள்ளதா என்ற கேள்விக்கு, பயிற்சி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுவரை புகார்கள் ஏதும் வரவில்லை என்றும், இது தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு மேலும் புகார்கள் இருந்தால் முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயிற்சியாளர் ஒருவர் மோசமாக நடந்துகொண்ட சம்பவத்தை குறிப்பிட்டுள்ள போலீசார், இன்றைய காலக்கட்டத்தில் யாரையுமே எளிதாக நம்பிவிடக்கூடாது என்றும், அனைவரின் மீதும் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எது நடந்தாலும் வீட்டில் பகிர்ந்துகொள்ளும் சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் எந்த பிரச்னை என்றாலும் அவர்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வார்கள் எனவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமிகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அது தொடர்பான புகார்களும் தொடர்ந்து பதிவாகிக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் மீது 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மீது அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ராஜகோபாலனை ஜூன் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல சென்னையில் வீராங்கனை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பயிற்சியை முடித்தபின் பிசியோதெரபி பயிற்சி என்ற பெயரில் என்னிடம் பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால், தடகளப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கமாட்டேன் என்று மிரட்டுவார் என வீராங்கனை புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சைவப் பால் தயாரிக்கலாமே.. யோசனை சொன்ன பீட்டாவுக்கு அமுல் நிறுவனத்தின் பதிலடி!