Mann Ki Baat : 'மன் கி பாத்' கேட்காத மாணவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்… பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பிய கல்வித்துறை!
வாட்ஸ்அப் மெசேஜில் பிரதமர் மோடியின் 100-வது மான் கி பாத் நிகழ்வை கேட்க வராத மாணவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கேட்க பள்ளிக்கு வராத மாணவர்களிடமிருந்து டேராடூனில் உள்ள பள்ளி ஒன்று ரூ.100 அபராதம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை பள்ளி நிர்வாகம் பள்ளியின் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்டுள்ளது.
100வது மான் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' ஏப்ரல் 30 ஆம் தேதி 100 எபிசோட்களை நிறைவு செய்தது. 100வது எபிசோடாக, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் உட்பட பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பல மாணவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளனர். இதையடுத்து டேராடூனில் உள்ள அந்த பள்ளி அன்றைய தினம் பிரதமரின் 'மான் கி பாத்' நிகழ்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் பட்டியல் தயாரித்து அவர்களது பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப்-இல் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
வராதவர்களுக்கு ரூ.100 அபராதம்
அந்த மெசேஜில் பிரதமர் மோடியின் 100வது மான் கி பாத் நிகழ்வை கேட்க வராத மாணவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இல்லையென்றால் அன்றைய தினம் உடல் நிலை சரியில்லாமல் போனதற்கு மருத்துவச் சான்றிதழோடு பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பெற்றோர் மற்றும் மாணவர் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் தேசிய தலைவர் ஆரிப் கான், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி டேராடூன் முதன்மை கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளிக்கு நோட்டிஸ்
பள்ளி கல்வித்துறை, சம்மந்தபட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆரிப் கான் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ரூ. 100 அபராதம் அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க டேராடூனின் ஜிஆர்டி நிரஞ்சன்பூர் அகாடமி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு."
பதில் வராவிட்டால் நடவடிக்கை
முதன்மை கல்வி அலுவலர் பிரதீப்குமார் கூறுகையில், "பள்ளிக்கு காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்களுக்குள் பள்ளி தரப்பில் ஆஜராகவில்லை என்றால், பள்ளி சார்பில் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதியாகும். அதன்பிறகு துறை நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்த நிலையில், இந்த நடவடிக்கை பல பெற்றோர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இது "மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தும் நிகழ்வு" என்று பலர் கூறினர். அந்த பள்ளியின் பெற்றோர்கள் பலர் 100 ரூபாய் கேட்டதற்கான ஆதாரத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துள்ளனர்.