ஏடிஎம் நம்பர், வங்கிக் கணக்கு.. எப்படி இருக்கிறது இந்தியர்களின் விழிப்புணர்வு? ஆய்வு முடிவு!
வங்கிக் கணக்கு விவரம் போன்ற விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் இந்தியர்கள் எவ்வளவு தூரம் விழிப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையின்படி மூன்றில் 1 இந்தியர் தங்களது வங்கிக் கணக்கு உள்ளிட்ட மிக முக்கியமான தனிநபர் விவரங்களை இமெயில், கணினி, செல்போனில் சேமித்துவைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சைபர் குற்றங்கள் மலிந்துவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை இமெயில், செல்போனில் உள்ள தகவல்களை ஹேக் செய்தே நடத்தப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் பின் நம்பர், ஏடிஎம் நம்பர், ஓடிபி போன்ற தகவல்களை யாரிடமும் எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது என வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், மக்கள் இன்னமும் கூட தங்களின் தனிபர் தகவல்களை ஸ்மார்ட் ஃபோன், இமெயில், கணினியில் சேமிக்கின்றனர். லாக்டவுன் காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்த நிலையில் நுகர்வோர் விவகாரத் துறை சார்பில் லோக்கல் சர்கிள்ஸ் என்ற அமைப்பு இந்தியர்களின் தனிநபர் விவர பாதுகாப்புப் பழக்கம் மற்றும் விழிப்புணர்வு குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 24000 பேர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் 393 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 63% பேர் ஆண்கள், 37% பேர் பெண்கள். ஆன்லைன் ஆய்வில் பங்கேற்றவர்களில் 45% பேர் மெட்ரோ முதல் அடுக்கு நகரங்களையும், 31% பேர் மெட்ரோ இரண்டாம் அடுக்கு நகரங்களையும் சேர்ந்தவர்கள். 24% பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தனிநபர் தகவல் பாதுகாப்பு மீறல்:
ஏடிஎம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எண்களை 29% இந்தியர்கள் அவர்களுடைய நெருங்கிய குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்கின்றனர். அதேபோல் 4% இந்தியர்கள் தங்கள் வீட்டுப் பணியாளர் அல்லது அலுவலக ஊழியர்களிடம் இந்தத் தகவல்களைப் பகிர்கின்றனர்.
மொபைலில் சேமிக்கும் 33%
அதேபோல், வங்கிக் கணக்கு விவரம், டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் ஏடிஎம் பின், ஆதார, பான் விவரங்கள் உள்ளிடவற்றை மூன்றில் ஒரு இந்தியர் அதாவது 33% பேர் இமெயில், கணினி, செல்போனில் சேமித்துவைத்திருக்கின்றனர். எல்லாவற்றையும் மனதிலேயே நினைவில் வைத்திருப்பதாக 21% பேர் கூறியுள்ளனர்.
மொபைல் கான்டாக்டில் சேமிப்பவர்கள் 11%
முக்கியமான தகவல்களை தங்களின் ஸ்மார்ட் ஃபோனில் கான்டாக்ட் லிஸ்டிலேயே சேமித்துவைப்பதாக 11% பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக செய்வது மிகமிக ஆபத்தானது என எச்சரிக்கிறது லோக்கள் சர்க்கிள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான செயலிகளை நாம் ஃபோனில் பதிவிறக்கம் செய்யும்போதே அவை நம் புகைப்படம், தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை எடுத்துக் கொள்வதாகக் கூறுகின்றன. ஆகையால் மொபைலில் தனிநபர் தகவல்களை சேமிப்பது துளியளவிலும்கூட பாதுகாப்பு அல்ல எனக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வறிக்கையின் முடிவை லோக்கல சர்க்கிள் அமைப்பு அரசாங்கத்தின் நிதி மேலாண்மை, சைபர் குற்றம் உள்ளிட்ட பல்வேறு அங்கங்களுடன் பகிரவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நம் செல்போன் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களில் எத்தனை பாஸ்வேர்ட் போட்டிருந்தாலும் கூட அவற்றில் முக்கியமான தகவல்களை சேமிப்பது தவறானது என்று எச்சரிக்கும் இன்னொரு ஆய்வு முடிவு இது.