திருவாரூர்: பில்லர் இல்லாமல் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடம் - எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம்
60 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. இந்த கட்டிடம் 15 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் , அதை இடிக்க முடியாது என தெரிவித்து பொதுப்பணி துறையினர் கட்டிடத்தை அகற்ற மறுக்கின்றனர்
திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் ஒன்று உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 190 மாணவர்கள், 165 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் புள்ளமங்கலம், வடபதிமங்கலம், ஊட்டியாணி, மணக்கரை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.51.44 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் கட்டிட பராமரிப்பு மற்றும் கட்டுமானத்துறை மூலம் ஆய்வக கட்டிடம் மற்றும் வகுப்பறை கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வகக் கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்கள் பில்லர் இல்லாமல் கட்டபட்டதால் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே இதனை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுப்பணி துறையின் மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் சுமார் 60 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போதைய இந்த கட்டிடம் 15 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், இந்த கட்டிடத்தை இடிக்க முடியாது என தெரிவித்து பொதுப்பணி துறையினர் கட்டடத்தை அகற்ற மறுக்கின்றனர். எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விடும் என்ற அச்சத்தில் பள்ளி இடைவேளை நேரங்களில் கட்டிடத்தின் அருகாமையில் செல்ல கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். கட்டிடத்தின் உரிய பயன்பாட்டு காலம் முடிவடைவதற்கு முன்பே கட்டிடம் சேதமடைந்து இருப்பதால், அரசின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது என்பதோடு, கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆய்வகம் பூட்டிக் கிடப்பதால், ஆய்வகத்துக்காக வாங்கப்பட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களும் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றது. வவ்வால் குடியிருக்கும் கட்டிடமாக அது மாறியுள்ளது. இதனால் அந்த கட்டிடத்தை பூட்டியே வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, ஆய்வக வசதியின்றி எவ்வித செயல்முறை பயிற்சியும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக செய்முறை தேர்வுக்கு மாணவர்கள் அருகாமையில் உள்ள பள்ளிக்கு சென்று வர வேண்டி உள்ளது. எனவே விரைவாக ஆய்வக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர். பெற்றோர்கள் கூறும்போது, தரமற்ற நிலையில் கட்டிடம் கட்டப்பட்டதால் பயன்பாட்டு காலத்துக்கு முன்னதாக ஆய்வக கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் விசாரிக்க வேண்டும் தரமற்ற கட்டிடம் கட்டப்பட்டதற்கு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.