நெல் சாகுபடியில் நஷ்டம்.. கைகொடுக்கும் பருத்தி! பாதையை மாற்றும் திருவாரூர் விவசாயிகள்!
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியின்போது ஏற்பட்ட நஷ்டத்தை நிகழாண்டில் பருத்தி சாகுபடி ஈடு செய்து கைகொடுக்கும் வகையில் கூடுதல் விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
சம்பா நெல் சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை பருத்தி சாகுபடி ஈடு செய்யும். திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள பருத்தி சாகுபடி.
திருவாரூர் மாவட்டத்தில் பிரதானமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது.தற்போது குறுவை சாகுபடிக்கு 75 வருடங்கள் கழித்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில்,குறுவை சாகுபடி சுமார் 90 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 32 ஆயிரம் ஏக்கர் நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதனிடையே, மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ள பருத்தி சாகுபடி வயல்களில் பருத்திக் காய்கள் வெடித்து முதல் சுற்று பஞ்சுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 40 ஆயிரத்து 299.5 ஏக்கர் பருத்தி சாகுபடி என்பது நடைபெற்றுள்ளது.கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக சுமார் 16 ஆயிரத்து 500 ஏக்கர் மட்டுமே பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில்,நிகழாண்டில் இதன் பரப்பளவு ஒன்றரை மடங்கு கூடுதலாக விவசாயிகள் பருத்தி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் திருவாரூர் 3557.5 ஏக்கர்,நன்னிலம் 8792 .5 ஏக்கர் குடவாசல் 10937.5, வலங்கைமான் 113 4 5, மன்னார்குடி 2142, நீடாமங்கலம் 1380, கூத்தாநல்லூர் 2145 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருத்தி கொள்முதல் ஏலம் தொடங்கியுள்ளது. கடந்தாண்டு குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.8558 குறைந்தபட்சமாக ரூ.4000 மட்டுமே கிடைத்த நிலையில், நடப்பாண்டில் பருத்தி கொள்முதலில், தொடக்க நிலையிலேயே அதிகபட்சமாக ரூ.12129, குறைந்த பட்சமாக ரூ.8419 வரை விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் கூறியதாவது. திருவாரூர், மூங்கில்குடி, வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி ஆகிய 5 இடங்களில் ஓழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெறுகின்றது. இதுவரை திருப்பூர், ஈரோடு உட்பட 12 வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். ஏலம் தொடங்கிய நிலையிலேயே கூடுதல் விலை கிடைத்திருப்பது கண்டு விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த உற்சாகம் இந்த பருவம் முடியும் வரை தொடரும் என்றனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது..
நடந்து முடிந்த சம்பா நெல் சாகுபடியில் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்திருந்தன. ஆனால் அறுவடை செய்யும் தருணத்தில், தை மாதத்தில் (ஜனவரி 15ம் தேதிக்கு மேல்) திருவாரூர் மாவட்டத்தில், பெய்த மழை காரணமாக, வயல்களில் தண்ணீர் தேங்கி, டயர் பொருத்திய அறுவடை இயந்திரத்தை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. மாறாக செயின் பொருத்திய அறுவடை நெல் இயந்திரம் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் ஒருமணி நேரத்துக்கு ரூ.800 கூடுதல் செலவு செய்யவேண்டிய நிலைஏற்பட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 (60 கிலோ) மூட்டைகளுக்குள்ளாக மட்டுமே மகசூல் கிடைத்தது. செய்த செலவை கூட ஈடு செய்ய முடியவில்லை. இந்த சூழலில், பருத்தியின் விலை கடந்தாண்டைக்காட்டிலும் கூடுதலாக சுமார் ரூ. 3500க்கும் அதிகமாக விலை கிடைத்து வருகின்றது. தொடக்கத்திலேயே இந்த விலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நெல் சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை பருத்தி சாகுபடி ஈடுசெய்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். தற்போது பருத்தி சாகுபடியில் மாவுப்பூச்சியின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இதனை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்கிற விவரம் பல விவசாயிகளுக்குத் தெரியவில்லை. இதனை அறிவுறுத்த வேண்டிய வேளாண் விரிவாக்க அதிகாரிகள் 8 வருவாய் கிராமங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் பணியிடங்கள் உள்ளன. ஒரு சில இடங்களில் இந்தப் பணியிடம் காலியாகவுள்ளது. இந்த குறைபாட்டை போக்கினால் வோண்மைத்துறை இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். குறிப்பாக எதிர்காலத்தில் பருத்தி சாகுபடியின் சாகுபடி பரப்பளவு இன்னும் விரிவடைய வாய்ப்பாக இருக்கும் என்றார்.