”புதுத் திட்டங்களையெல்லாம் தருமபுரியிலேயே துவங்கும் முதல்வர் ஸ்டாலின்” இதுதான் காரணம்..!
தமிழ்நாடு முழுவதும் ஊரக பகுதிக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை வருகிற 11-ம் தேதி, முதலமைச்சர் தருமபுரியில் தொடங்கி வைக்கிறார்-அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி,
மக்களுடன் முதல்வர் திட்டம் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் வருகிற ஜூலை 11ஆம் தேதி தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
ஆய்வு செய்த அமைச்சர் - சொன்ன புது தகவல்
இந்நிலையில் முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறுவதற்காக பாலம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க விழா நடைபெறும் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வர் வருகை குறித்த ஏற்பாடுகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது விழா மேடை அமைய உள்ள இடம் பயனாளிகள் வருவதற்கான பாதைகள் வாகன நிறுத்தும் இடம் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் முதலமைச்சரிடம் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மனுக்களை வரிசைப்படுத்தி பதிவு செய்தல் அவர்களை விழா மேடைக்கு அனுப்பி வைத்தல் போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் இருக்கைகள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்னது என்ன?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழ்நாடு முழுவதும் ஊரக பகுதிக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை வருகிற 11-ம் தேதி, தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே நகர் புற பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை, கடந்த ஆண்டு கோவையில் தொடங்கி வைத்தார். வருகிற 11-ம் தேதி தருமபுரியில் தொடங்கி வைத்து, ரூ.500 கோடி மதிப்பில், முடிவுற்ற மற்றும், புதிய திட்டப் பணிகள் உள்ளிட்ட 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மகளிர் சுய உதவி குழுவினை, தருமபுரியில் தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு, விண்ணப்ப பதிவேற்றத்தினை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதும், 1.20 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கடந்த காலங்களில் முதல்வர், எம்எல்ஏ, எம்பிக்களை பார்க்க முடியாது. ஆனால் இன்றைய முதலமைச்சர் எளிமையாக இருக்கிறார். மக்களை அடிக்கடி நேரில் சந்திக்கிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வந்திருக்கிறார் என தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின்
அதோடு, தருமபுரி மாவட்டம் மீதும் அந்த மாவட்ட மக்கள் மீது பெரும் அன்பு கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பின் தங்கியுள்ள பட்டியலில் இருக்கும் இந்த மாவட்டத்தை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை இங்கிருந்தே செயல்படுத்த ஆணையிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தை அவர் இங்குதான் செயல்படுத்தினார். அதைப்போலவே, மக்களுக்கான அடிப்படை திட்டங்கள், குறை தீர்ப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றை தருமபுரி மாவட்டத்தில் தொடங்குவதிலேயே முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார்
எனவே மக்கள் தங்களது தேவைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுத்து, இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, சுகாதார பணிகள் இணைய இயக்குனர் சாந்தி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.