Cauvery Water : ”காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளம் – வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக வரும் தண்ணீர்” மேட்டூர் அணை திறக்கப்படுமா..?
"வெள்ளப் பெருக்கால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீட்டிப்பு”’
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
வெள்ளப் பெருக்கால் தத்தளிக்கும் ஒகேனக்கல்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கிருஷ்ணராஜ் சாகர் அணையின் கிளை நதியான ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வினாடிக்கு 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருவி மூலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வருகின்ற தண்ணீரை அப்படியே உபரிநீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து காணப்பட்டது.
நேற்று முதல் உயரும் நீர் மட்டம்
நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 45,000, 50,000, 60,000, என உயர்ந்து வந்தது. தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இது மேலும் படிப்படியாக அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ள இதற்கு ஏற்பட்டு ஒகேனக்கல் பகுதியில் பாறைகள் அருவிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
குளிக்க, படகு இயக்க, வரத் தடை - மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை
கடந்த 12 நாட்களாக ஒகேனக்கல்லில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கர்நாடகா
மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், எந்த நேரத்திலும் நீர் திறப்பு ஒரு லட்சம் கன அடி முதல் 1.50 இலட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில பொதுப்பணித் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலில் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று இரவுக்குள் தமிழக எல்லையை வந்து அடையும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
மேட்டூர் அணை திறக்கப்படுமா ?
வழக்கமாக, ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும் மேட்டூர் அணை, போதிய அளவு நீர் இல்லாததால் இதுவரை திறக்கப்படவில்லை. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விரைவில் அதனை பாசனத்திற்கு திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.