How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
'செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை தண்ணீரில் போட்டு பாருங்கள். மூழ்கினால் இயற்கையானது. மிதந்தால் செயற்கையானது’
வெயில் காலம் வந்தாலே நமக்கெல்லாம் மாம்பழத்தின் நினைவும் கூடவே வந்துவிடும். தகிக்கும் வெயிலில் மாம்பழத்தை சுவைப்பது தனி இன்பம்தான். ஆனால், நாம் கடைகளில் வாங்கும் எல்லா மாம்பழங்களும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா ? இல்லை செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்ற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் நிலவுகிறது. செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை உண்பதால், பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன. சரி, நீங்கள் வாங்கும் மாம்பழங்கள் இயற்கையாக பழுத்ததா ? இல்லை செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
அதிக மா விளையும் மாவட்டமான கிருஷ்ணகிரி
தமிழகத்திலியே அதிகளவில் மாவிளையும் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும். இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். அதே போல் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பபடுகிறது. இந்நிலையில் நிகழாண்டு போதிய மழையின்மை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு மாம்பழம் சீசன் தாமதமாக தொடங்கி உள்ளதால், தற்போது செந்தூரா, மல்கோவா போன்ற மாம்பழங்கல் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற ரக மாம்பழங்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஓசூர் நகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதில் சில மாமம்பழங்கள் நன்கு கலராக உள்ளதாகவும், ஆனால் சுவை இல்லை எனவும் இது போன்ற பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யவதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - எச்சரிக்கை
காய் பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் இயற்கையாக பழுக்க சுமாா் ஒரு வார காலம் பிடிக்கும். ஆனால் வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா். இந்த முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. தற்போது ‘கால்சியம் காா்பைடு’ கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை அதிகாரிகளும், நுகா்வோரும் எளிதில் கண்டறிவதால், வியாபாரிகள் சிலா் ‘எத்திலின்’ என்ற ரசாயனப் பொடி மூலம் பழங்களை பழுக்க வைக்கின்றனா். இந்தப் பொடியை தண்ணீரில் கரைத்து பழங்கள் மீது தெளிக்கின்றனா். இந்த பொடியிலிருந்து எந்த வாசனையும் வருவதில்லை. இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்துள்ளதைக் கண்டறிய முடிவதில்லை.
ரசாயனத்தை கலந்தால் கடும் நடவடிக்கை
பழங்களை பழுக்க வைக்க ஒரு குறிப்பிட்ட அளவிற்கு எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. எனவே இதுபோன்ற மாம்பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ரசாயன மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி ?
மாம்பழங்கள் முழுமையாக ஒரே கலராக இருந்தால் அதில் அதிக ரசாயன பொடி வைத்து பழுக்க வைத்த மாம்பழம். அப்படி சந்தேகம் இருந்தால் மாம்பழங்களை தண்ணீரில் போட்டு, அது தண்ணீருக்குள் மூழ்கினால், இயற்க்கையாக பழுத்த பழம், அல்லது தண்ணீரில் மிதந்தால், அவை செயற்கையாக பழுக்க வைத்த பழம் என பொதுமக்கள் சுலபமாக தெரிந்துள்ளலாம். அதே போல் இயற்கை முறையில் மம்பழம் பழக்க வைக்க வேளாண்துறையினர் பல்வேறு ஆலோசனை வழங்குகின்றனர். அவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பழங்களை பழுக்க வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ரசாயன பொடி கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.