அதிர்ச்சி வீடியோ! சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட ஓட்டல் ஓனர்; ஷூவால் அடிக்க சென்ற போலீஸ்
தினமும் உணவருந்தி விட்டு முழு தொகையை கொடுக்காமல் கொஞ்சம் நிலுவை வைத்து செல்வது காவலரின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
உணவு சாப்பிட்ட காவலரிடம், நிலுவை பணம் கேட்ட உரிமையாளரை, காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல், கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
உணவு சாப்பிட்ட காவலரிடம் பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு, பணம் நாளை தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு உணவு சாப்பிட வந்த காவேரி, சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் முத்தமிழ் என்பவர், நேற்று சாப்பிட்டதில் நிலுவை தொகை கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ காவேரி, முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
பணத்தை தூக்கி வீசிய காவலர்
மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு, கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்தரத்தில் காலில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க சென்றுள்ளார். ஆனால் அருகில் இருந்தவர்கள் தடுத்ததால், அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
ஷூ கழட்டி அடிக்க சென்ற சம்பவம் சிசிடிவி பதிவாகியுள்ளது
இந்த சம்பவம் ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மேலும் காவலர் சீருடையில், இருக்கும் ஒருவர், ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை வீசிவிட்டு, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை பெரும் ஏற்படுத்தியுள்ளது.
தினமும் சாப்பிட்டுவிட்டு முழு பணமும் கொடுப்பதில்லை
தினமும் SSI காவேரி, தங்களது ஓட்டலில் வந்து சாப்பிட்டு விட்டு முழுப் பணத்தை கொடுப்பதில்லை. நாளை தருவதாக சொல்லிவிட்டு சென்று விடுவார். ஆனால் அடுத்த நாள் அந்த நிலுவை பணத்தை தரமாட்டார். காவல் துறையிடம் பகைத்து கொண்டால், தொழில் செய்ய முடியாது என்பதால், பெரியதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், நேற்று சாப்பிட்ட நிலுவை தொகை கேட்டதால், தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து, காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி தன்னை தாக்க வந்தார். இதுகுறித்து நாளை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், SSI காவேரி மீது புகார் மனு அளிக்க உள்ளேன், ஓட்டல் உரிமையாளர் முத்தமிழ் என தெரிவித்தார்.
எஸ்எஸ்ஐ காவேரி பணியிடை நீக்கம்
இதனை அடுத்து இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், எஸ்எஸ்ஐ காவேரியை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது உணவகத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், எஸ்எஸ்ஐ காவேரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சீருடை அணிந்து கொண்ட கண்ணியமிக்க காவல் துறையினர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் அறிவுறுத்தினார். மேலும் உணவகத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட எஸ்.எஸ்.ஐ. மீது உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.