பருவமழையின்மை, வெப்ப அலை... 5 ஆண்டுகளுக்கு பிறகு நீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி ஆறு
பருவமழையின்மை, வெப்ப அலை காரணமாக வறண்டு பாறைகளாக காட்சியளித்தும் வரும் காவிரி ஆறு.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து, பூம்புகார் வரை சென்று கடலில் கலக்கிறது. மேலும் ஆண்டுதோறும் இரண்டு, மூன்று முறை பருவமழை பொழிவால், காவிரியில் அதிக அளவு தண்ணீர் வரும். சில நேரங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இது மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது. பருவமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வரும் தண்ணீரை, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் அளவீடு செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒகேனக்கல் வழியாக தண்ணீர் மேட்டூர் அணைக்கு செல்கிறது.
காவிரியில் எப்பொழுதும் தண்ணீர் வருவதால், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து, ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்துவிட்டு, பரிசல் பயணம் சென்று ஐந்து அறிவின் அழகை கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மாதம் தோறும் திறக்கப்படுகின்ற தண்ணீர், திறக்கப்படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
மேலும் கடுமையான வெப்பம், பருவமழை பொய்த்து போனதால், அகன்ற காவிரி தற்பொழுது நீரின்றி வறண்டு பாறைகளாக காட்சியளித்து வருகிறது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் வண்ண மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு இதேபோன்று காவிரி ஆற்றில் முற்றிலுமாக தண்ணீர் இல்லாமல், வறண்டு பாறைகளாகவும், அருவிகளில் தண்ணீரில் இல்லாமல் காட்சியளித்து வந்தது. தற்போது ஐந்தாண்டுக்கு பிறகு மீண்டும் காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்ட பாறைகளாக காட்சியளித்து வருகிறது.