'ஊர் ஊராக போய் பாட்டு பாடி, நாடகம் போட்டு விழிப்புணர்வு பண்ணோம்' - அதிகாரிங்க எங்களை ஏமாத்திட்டாங்க
தருமபுரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு, கழிவறை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்திய, கிராமிய கலைஞர்களுக்கு அரசு மதிப்பு ஊதியம் கொடுக்கவில்லை என புகார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம் ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பர் என சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், பிளாஸ்டிக் பயன்பாடு, திறந்தவெளியில் மலம் கழிக்காமல், கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கிராமிய கலை குழுவினருக்கு, கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும, 5 கிராமிய கலை குழுக்கள் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு ஒரு கிராமத்திற்கு 6500 மதிப்பூதியம் நிர்ணயம் செய்யப்பட்டு கிராமிய கலைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து தருமபுரி மாவட்டம் முழுவதும் 5 கிராமிய கலை குழுக்களைச் சேர்ந்த 50 கலைஞர்கள், கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து, சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து, நாடகங்கள் நடித்தும், பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பது குறித்தும், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்துள்ளனர். அதேபோல் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் நோய் தாக்குதல் ஏற்படுவது குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் விளக்கியுள்ளனர். மேலும் கழிவறைகளை பயன்படுத்தி சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்கவும், நோய் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாடகங்கள், கிராமிய கலைகள் பாடல்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
"43 முறை மனு கொடுத்தோம்"
இதனைத் தொடர்ந்து 251 கிராம ஊராட்சிகளிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, தங்களுக்கான மதிப்பூதியத்தினை வழங்குமாறு, ஆவணங்களை தயார் செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இந்த மதிப்பூதியத்தை மூன்று வகையாக பிரித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம ஊராட்சி நிர்வாகத்தில் வழங்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கிராமிய கலைஞர்களுக்கான மதிப்பூதியம் பெரும்பாலான இடங்களில் முறையாக வழங்கப்படவில்லை. ஒரு சில கிராம ஊராட்சிகளில் மட்டுமே வழங்கி உள்ளனர். இது குறித்து கிராம கலை குழுவினர் மாவட்ட திட்ட அலுவலரிடம் முறையிட்டுள்ளனர். அப்பொழுது மீண்டும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு ஆணையை வழங்கி, இரண்டிற்கும் மதிப்பூதியம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை கிராமிய கலைஞர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.
இதனை அடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதிப்புதியும் வழங்க வலியுறுத்தி கிராமிய கலை குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் மதிப்பூதியம் வழங்க வலியுறுத்தி, இதுவரை 43 முறை மனு அளித்திருப்பதாகவும், ஒரு மனுவிற்கு கூட எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் தங்களுக்கு போதிய வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு மதிப்பு புதிய வழங்கப்படவில்லை. தங்களுக்கு வழங்கக் கூடிய மதிப்பூதியம் வழங்கவில்லை என்றால், கிராமிய கலைஞர்கள் ஒன்றிணைந்து பிச்சை எடுக்குய் போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என தெரிவித்தனர்.