Annamalai: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 வழக்குகள்.. அண்ணாமலைக்கு காவல்துறை செக்!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்பட 3 பிரிவின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தர்மபுரி போலீசார் மத பகையை ஊக்குவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களிடையே தகராறு செய்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பி.பள்ளிப்பட்டியில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், லூர்து மாதா ஆலயத்திற்குள் நுழைந்து சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வந்தது.
என்ன நடந்தது..?
கடந்த செவ்வாய்க்கிழமை தர்மபுரி அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடியில் உள்ள செயின்ட் லூர்து தேவாலயத்திற்கு வெளியே ‘என் மண் என் மக்கள்’ பேரணியின்போது தேவாலயத்திற்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்துவ இளைஞர் குழுவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் கிளர்ந்தெழுந்த இளைஞர்களின் தோள்களில் கைகளை வைத்து அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். இருப்பினும், பேச்சு அப்படியே வளர்ந்துகொண்டே வாக்குவாதமாக முற்றியது.
யாத்திரையின்போது அண்ணாமலை, தேவாலயத்திற்குள் நுழைந்து மாதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க முயற்சித்தர். ஆனால், அங்கு கூடியிறுத்த கிறிஸ்தவ இளைஞர்கள் அவர் தேவாலயத்திற்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, இளைஞர்கள் கூட்டம் மணிப்பூர் கலவரம் குறித்து அவரிடம் 'ஏன் கிறிஸ்தவர்களைக் கொன்றீர்கள்' போன்ற கூர்மையான கேள்விகளுடன் கேட்டனர். இது இரு பழங்குடியினருக்கு இடையிலான சண்டை என்றும், அந்த மோதலில் மதத்தின் பங்கு இல்லை என்றும் அண்ணாமலை அவர்களுக்கு விளக்க முயன்றார்.
ஆனால் அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருப்பது பாஜக தான் என்றும், கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இளைஞர்கள் கூறினர். திமுகவைப் போல பேச வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதுடன், தேவாலயத்திற்குள் நுழைய உரிமை உண்டு என்று மாலை அணிவிக்க முயற்சித்தார். மீண்டும் இளைஞர்கள், அண்ணாமலை நுழைய அனுமதிக்க மறுத்ததால் அங்கு வாக்குவாதமாக முற்ற தொடங்கியது.
வழக்குப்பதிவு:
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, தங்கள் பெயரில் தேவாலயம் உள்ளதா என்றும், 10 ஆயிரம் பேரை திரட்டி தர்ணா செய்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். அதன்பின்னர், தேவாலயத்திற்குள் நுழைந்து அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
இந்தநிலையில், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்தில் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்பட 3 பிரிவின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2023 ம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி அன்று அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அன்று தொடங்கப்பட்ட யாத்திரையானது பல மாவட்டங்களுக்கு சென்றாலும் இதுவரை இது போன்ற மோதல்களை பார்த்ததில்லை. தற்போது, தர்மபுரியில் வாக்குவாதமானதால் அண்ணாமலையின் யாத்திரை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.