History of Topslip: ’ஆங்கிலேயரின் பேராசை கோடரிகளுக்கு பலியான தேக்கு மரங்கள் - டாப்சிலிப்’ உருவான சுவாரஸ்ய கதை
கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உலாவும் மலைக்காடுகள் என்பதால் யானை மலை என அழைக்கப்பட்டது. அது காலப்போக்கில் மருவி ஆனைமலை ஆனது.
டாப்சிலிப், புகழ் பெற்ற சுற்றுலா தளமாக அறியப்படும் ஒரிடம். இயற்கை ஏழில் கொஞ்சும் வனப்பகுதியில் வன விலங்குகளை கண்டு இரசிக்க இயற்கை ஆர்வலர்கள் படையெடுக்கும் பகுதி. காட்டு யானை, மான், காட்டெருமை என பல விதமான வன உயிரினங்களின் புகலிடமாக உள்ள அப்பகுதி எப்படி உருவானது என்பது சுவராஜ்யமானது.
திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் கொங்கு பகுதிகள் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட கோவை மாவட்டத்தின் எல்லை என்பது வடக்கே கொள்ளேகால், தெற்கே திருவாங்கூர், மேற்கே மலபார், கிழக்கே மதுரை என பரந்து விரிந்து இருந்தது. கோவை மாவட்டத்தின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் ஆனைமலை காடுகள் செழித்து காணப்பட்டன. இப்பகுதி கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உலாவும் மலைக்காடுகள் என்பதால் யானை மலை என அழைக்கப்பட்டது. அது காலப்போக்கில் மருவி ஆனைமலை ஆனது. அப்போது ஆனைமலையில் பெரும்பாலான பகுதிகள் மனிதக் காலாடி படாத அடர்ந்த வனப்பகுதியாகவும், அளவற்ற காட்டு வளங்களை கொண்ட இடமாகவும் இருந்தது.
பிரிட்டனில் ஓக் மரங்கள் தட்டுப்பாடு காரணமாக, பர்மா மற்றும் இந்தியா காடுகளில் ஆங்கிலேயர்கள் தங்களது கவனத்தை திருப்பினர். அப்போது கோவை மாவட்டம் ஆனைமலை காடுகளில் உறுதியும், வலிமையும் வாய்ந்த கணக்கிலடங்காத தேக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் ஆங்கிலேயர்களின் பேராசை கோடாரிகளுக்கு தேக்கு மரக்காடுகள் பலியாகின. முறையின்றி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் ஒரு பக்கம் மாவட்டத்தில் அதிக வருவாய் அளிக்கும் வனச்சரகமாக ஆனைமலை உருவானது. மறுபக்கம் காடுகள் அழிக்கப்பட்டு பொட்டல் காடானது.
ஆனைமலை தேக்குகள் பாம்பாய் கப்பல் துறை பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. முறையான பாதை இல்லாத அக்காலத்தில் தேக்கு மரங்களை வெட்டி மாட்டு வண்டிகளில், கீழே கொண்டு செல்வது பெரும் சிரமமாக இருந்தது. அப்போது உயரமான ஒரு மலைச்சரிவில் இருந்து மரங்களை கீழே தள்ளி விடும் முறை என்பது கேப்டன் மைக்கல் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. வெட்டப்பட்ட தேக்கு மரக்கட்டைகளை ஒரிடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஒவ்வொன்றாக கீழே தள்ளி விடப்பட்டன. பின்னர் மலை அடிவாரத்தில் இருக்கும் ஆட்கள் மரக்கட்டைகளை எடுத்து கொச்சின் கொண்டு சென்றனர். மலைமுகட்டிலிருந்து மரங்கள் கீழே தள்ளப்பட்ட இடத்தில் உள்ள கிராமமே டாப் ஸ்லிப் என அறியப்படுகிறது. முதன் முதலாக இங்கே துவங்கிய ஒரு அஞ்சலகத்திற்குத்தான் ’டாப் ஸ்லிப்’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்டது.
காட்டு யானைகளை பிடித்து அவற்றை பழக்கி மரக்கட்டைகளை இழுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டன. 1920 ம் ஆண்டில் ஆனைமலை சுங்கத்தில் உருவாக்கப்பட்ட வளர்ப்பு யானை முகாம், 1956ம் ஆண்டில் வரகழியாறுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பல பத்தாண்டுகள் மர வெட்டு வேலை தொடர்ந்தது. 1889 ஆம் ஆண்டு டாப் ஸ்லிப்பிலிருந்து, 11 கி.மீ. நீள தண்டவாளம் ஒன்று போடப்பட்டு, மாடுகளால் அல்லது யானைகளால் இழுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் மூலம் மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பொள்ளாச்சியிலிருந்து ரயில் மூலம் வேறு இடங்களுக்கு மரங்கள் அனுப்பப்பட்டன. தொடர்ந்து நடந்த மர வெட்டுதலினால் தேக்கு மரங்கள் ஆனைமலை காடுகளில் இருந்து வெட்டி அழிக்கப்பட்டன. இதையடுத்து தேக்குகளை மீட்டுருவாக்கம் செய்யும் ஆங்கிலேய அதிகாரிகளின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
இத்தகைய சூழலில் 1915 ம் ஆண்டில் கோயம்புத்தூர் தெற்கு வனக்கோட்ட துணை வனப்பாதுகாவலராக ஹியூகோ பிரான்சிஸ் ஆண்ட்ரவ் வுட் பொறுப்பேற்றார். தேக்கு மர அறுவடையை நிறுத்தாமலும், அதேசமயம் ஆனைமலைக்காடுகள் பொட்டலாகி விடாமல் அழிவினின்று காக்கும் முயற்சியை அவர் கையில் எடுத்தார். மரங்களை அடியோடு வேரோடு வெட்டக்கூடாது. அடி மரத்தின் ஓரிரு அடிகளை விட்டு விட்டு வெட்டினால் வெட்டுமரமும் கிடைக்கும். அடிமரத்திலிருந்து மறுபடியும் மரமும் துளிர்க்கும் எனவும், சில பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு மரங்களை வெட்டக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். டாப்சிலிப் பகுதியில் வசதிகள் அற்ற சிறிய வீட்டில் குடியிருந்து தேக்கு மரங்களை நடவு செய்யும் பணிகளில் ஹியூகோ வுட் ஈடுபட்டார். பழங்குடியின மக்கள் உதவியுடன் அவர் செய்த பெரும்பணியால் வனப்பகுதியில் பல ஏக்கரில் தேக்கு மரங்கள் உருவாகுவதற்கு காரணமாக இருந்தார். இதன் காரணமாக ஆனைமலை காடுகள் முற்றிலும் அழிவதில் இருந்து காப்பாற்றப்பட்டது.
பின்னர் ஹியூகோ வுட் வனப்பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று ஆனைமலை காடுகளை விட்டுச் சென்றார். பின்னர் 1933ம் ஆண்டு ஹியூகோ வுட் உதகையில் மரணம் அடைந்தார். அவரது விருப்பப்படி டாப்சிலிப் அருகே அவர் வசித்த வீட்டிற்கு அருகே தேக்கு மரங்களுக்கு இடையே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், மொழி வழி மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாடு - கேரளா மாநில எல்லைகள் இந்த இடத்தில் தெளிவாக நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது.
“நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் சுற்றிப் பாருங்கள்” என்ற வாசகம் ஹியூகோ வுட் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆம், ஆனைமலை காடுகளை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாத்த ஹியூகோ வுட் சுற்றியிருக்கும் அத்தனை மரங்களிலும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.