கோவை : குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்.. குப்பை கொட்டுபவர்களின் வீடியோ கொடுத்தால் ரூ.500 சன்மானம் ; ஊராட்சி நிர்வாகம் அதிரடி
காட்டம்பட்டி ஊராட்சியில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்கள் வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காட்டம்பட்டி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் குப்பை கொட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்கள் வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டி என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். அப்படியிருந்தும் பொது மக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார். இந்த போர்டில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக் கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சியால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தின் கூறுகையில், “காட்டம்பட்டி ஊராட்சியில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை மீறி சிலர் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில், குப்பை கொட்டுபவர்கள் வீடியோ எடுத்து தந்தால் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முதற்கட்டமாக 4 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பொது மக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப் பணி தொடரும்” எனத் தெரிவித்தனர்.
ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்
கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே ஊராட்சி அல்லது வட்டாரத்தில் பணியாற்றி வரும் 84 ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிமாறுதல் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும், பணி மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்லக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை மீறி விடுப்பில் செல்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பதில் நபரை எதிர்பார்க்காமல் பணி மாறுதல் வழங்கப்பட்ட பணியிட்டத்தில் உடனடியாக பணியேற்பு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிரடியாக 84 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்