உதகையை உறைய வைக்கும் உறைபனி ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர பகுதிகளில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. புறநகர் பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் தொடரும் கடும் உறைபனி பொழிவு மற்றும் கடுங்குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும். டிசம்பர் மாதத்தின் இறுதி நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலையின் அளவு பூஜ்யம் டிகிரிக்கு செல்லக்கூடும். சில நாட்களில் பூஜ்ஜியத்துக்கும் கீழ் பெப்பநிலை இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் ஆகியவை கருகிவிடும்.
குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து, படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணத்தால் பனிபொழிவு தாமதமாக தற்போது துவங்கியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவியது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்படுகிறது. உறைபனி பொழிவு காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் மீது உறைபனி பொழிவு காணப்பட்டது. குறிப்பாக உதகை நகர், தலைகுந்தா, காந்தள், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது பனி படிந்திருந்தது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் உறைபனியால் புல்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போல ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதனால் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போர்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் உறைபனியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் இந்த தட்ப வெப்ப நிலையை அனுபவித்து செல்கின்றனர். இன்று மூன்றாவது நாளாக உறைபனி காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர பகுதிகளில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. புறநகர் பகுதிகளிலும், அவலாஞ்சி, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்