![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
’வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்’ – எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் உறுதி..!
வெள்ளை அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை. 13-ஆம் தேதி சட்டமன்றத்தில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற போவதில்லை. அதனை திசை திருப்ப வேண்டி நாடகம் ஆடுகிறார்கள் - எஸ்.பி.அன்பரசன்
![’வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்’ – எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் உறுதி..! S.p.velumani's brother Anparasan said that they will face dvac case according to the law ’வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்’ – எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் உறுதி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/5763a3cbb8aad838a2c248ecdffd01b9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் சகோதாரரும், நல்லறம் அறக்கட்டளையின் தலைவருமான எஸ்.பி.அன்பரசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ”லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ழுழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்தது. அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் எங்களது அனைத்து இல்லங்கள், நிறுவனங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் எந்த விதமான ஆவணங்களும் கிடைக்கவில்லை. காலையில் இருந்து சோதனை செய்து எதுவும் கிடைக்காமல்தான் திரும்பிச் சென்றார்கள்.
இந்த சோதனைக்கு முக்கிய காரணம் வெள்ளை அறிக்கைதான். அந்த அறிக்கையில் எனது சகோதரர் நிர்வகித்து வந்த உள்ளாட்சி துறையில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அதற்கு பத்து வருடங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி என எந்த வரியையும் நாங்கள் ஏற்றவில்லை. திமுக முதலில் ஏற்றி வைத்த வரியை தான் வசூலித்து வந்தோம். பொதுமக்கள் சிரமத்தை மனதில் கொண்டு வரியை ஏற்றவில்லை. மக்களுக்கு எந்த சிரமமும் கொடுக்கவில்லை. வெள்ளை அறிக்கை மக்களிடம் எடுபடவில்லை. 13-ஆம் தேதி சட்டமன்றத்தில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற போவதில்லை. அதனை திசை திருப்ப வேண்டி நாடகம் ஆடுகிறார்கள்.
அடிமை மீடியாக்களை வைத்துக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். டெண்டரில் மோசடி, கம்பெனி இத்தனை சதவீதம் அதிகம் வளர்ச்சி என்கிறார்கள். எனது கம்பெனி 100 சதவீத வளர்ச்சி அடைந்தது என்கிறார்கள். போன வருடம் பத்து கோடி டர்ன் ஒவர் பண்ணி இருந்தால், இந்த வருடம் 20 கோடியாக இருப்பது இயற்கை. 10 கோடி டர்ன் ஓவர் செய்த சன் குழுமம் 10 ஆயிரம் கோடியாகி இருக்கிறது. அவர்கள் எந்த மாதிரி ஊழல் செய்து இருப்பார்கள்?
வருகின்ற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களது பலத்தை நிருபீப்போம். கடந்த தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின் கோவையில் பத்து இடங்களில் வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்வோம், கைது செய்வோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தார். திமுக தலைவர், அவரது மகன், ஐ பேக் டீம் என ஒரு பெரிய கூட்டம் எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. கோவையில் பத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எங்களை முடக்கினால் வெற்றி பெறலாம் என ரைடு நடக்கிறது.
அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு எப்படி இப்போது வழக்குப்பதிவு செய்தார்கள்?. வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)