கல்லூரி செல்லாமல் தவிக்கும் பப்புவா நியூ கினியா மாணவர்கள்; இந்திய கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்!
பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் இந்தியர்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பாக அமையும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு மட்டுமே கல்வி அளித்து வருவதால் இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அந்நாட்டிற்கு வந்தால் இந்தியர்களுக்கு தொழில் தொடங்க ஒரு வாய்ப்பாக அமையும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் பேசியதாவது:
’’பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளன. ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படும் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவைப் போல் தனியார் கல்வி நிலையங்கள் அங்கு இல்லை. இதனால் இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் நாட்டில் தொழில் தொடங்க நிறைய வாய்ப்பு உள்ளது.
எங்கள் நாடு ஆஸ்திரேலியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு. இந்தியாவுக்கும் பப்புவா நாட்டிற்கும் 80களில் இருந்தே உறவுகள் உள்ளன. அங்கு கனிம வளம், விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் அதிகம் உள்ளன. சாட்டிலைட் தொடர்பாக இந்தியாவிலிருந்து பப்புவா நாட்டிற்கு இஸ்ரோ குழுவினர்கள் நவ. 25ஆம் தேதி வருகின்றனர்.
மேல் படிப்புக்குச் செல்லாத 50 ஆயிரம் மாணவர்கள்
எங்கள் நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடத்திற்கு 80 ஆயிரம் மாணவர்கள் வெளியில் வருகிறார்கள். 10 ஆயிரம் பேர் தொழில் படிப்பு படிக்கும் நிலையில், மேலும் பத்தாயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். 10 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது. இதனால் 50 ஆயிரம் மாணவர்கள், மேல் படிப்புக்குப் போக முடியாமல் உள்ளனர்.
அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால், அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம்.அங்குள்ள இந்தியர்கள், நவராத்திரியைக் கொண்டாடினர். இந்தியர்கள் வெளிநாட்டில் ஒற்றுமையாக உள்ளனர்.வெளிநாட்டுத் தமிழர்கள் தங்களது கலாச்சாரத்தை மறக்கவில்லை’’.
இவ்வாறு ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் தெரிவித்தார்.