கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை..!
3 பேரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. டேனிஷ், தினேஷ் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள்.
கோவை மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 23 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. புலியகுளம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான தினேஷ், சுங்கம் பகுதியை சேர்ந்த டேனிஷ் மற்றும் பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 3 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை 6.30 மணி முதல் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் முடிவில் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தெரியவரும். 3 பேரின் வீடுகளின் முன்பும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக அவரது தந்தை அர்ஜூனன் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட சந்தோஷ் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்தது தெரியவந்தது. மேலும் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கி இருந்ததாகவும், சந்தோஷ் மீது கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் சந்தோஷ் தொடர்பான வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை மற்றும் அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம் நான்கு பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை புலியகுளம் ஏரி மேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பல் மருத்துவரான இவர், இடையர்பாளையம் பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். மாவோயிஸ்ட் ஆதரவாளரான அறியப்பட்டவர். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் தினேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் டாக்டர் தினேசை கைது செய்து கேரள ஜெயிலில் அடைத்தனர்.
சுங்கம் பகுதியை சேர்ந்தவர் டேனிஷ். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர் கேரள மாநிலத்துக்கு உட்பட்ட அகழி வனப்பகுதியில் பதுங்கி இருந்து, கொரில்லா தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கேரளாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதிகளில் ஆட்களை ஒன்றிணைக்கும் பணியில் டேனிஷ் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. டேனிஷ் மீது பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, மூளைச் சலவை செய்ததாக நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை காவல் நிலையத்திலும் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.