கோவையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
’’புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும் போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கம் என்பதால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை’’
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி..வீரமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதார துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்தார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை என 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் இந்த சோதனை வளையத்திற்குள் வந்துள்ளது. அந்த வகையில் கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலை எஸ்.என்.வி கார்டன் பகுதியில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் வீடு உள்ளது. இந்த வீட்டிலும் இன்று காலை 6 மணி முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக வீட்டின் முன்பு காவல் துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை வரும் போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது இந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2016 முதல் 21 வரையிலான 5 ஆண்டு காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, 27 கோடி ரூபாய் வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்தாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், இழுப்பூர் கிராமத்தில் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் பேரில் மதர் தெரசா கல்வி மற்றும் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் தான் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.