'கோவையில் கமல்ஹாசனை எதிர்த்து அண்ணாமலை போட்டியா?’ - கள நிலவரம் என்ன?
கோவை நாடாளுமன்ற தொகுதியில் எந்த கட்சிகள் போட்டியிடும், யார் வேட்பாளராக வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நாளுக்கு நாள் தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், யார் யார் எங்கு போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் எந்த கட்சிகள் போட்டியிடும், யார் வேட்பாளராக வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
கோவை நாடாளுமன்ற தொகுதி
கோவை நாடாளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகள் நகரப்பகுதிகளையும், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய தொகுதிகள் கிராமப்புறங்களை உள்ளடக்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாகவும், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொகுதியாகவும் கவுண்டம்பாளையம் தொகுதி அமைந்துள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.ஆர். நடராஜன் பதவி வகித்து வருகிறார். கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை விட 1 இலட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. அதன் காரணமாக தேசிய கட்சிகளே இந்த தொகுதியை அதிகமாக வென்றுள்ளன. கோவை தொகுதியை காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன.
கோவையில் போட்டியிடும் கட்சிகள்
கோவை நாடாளுமன்ற தொகுதியை வழக்கம் போல திமுக, அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிக்கே இந்த முறையும் கொடுக்க இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இத்தொகுதியை பெறுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே வெற்றி பெற்ற கோவை தொகுதியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. அதற்கேற்ப அக்கட்சி தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை வாங்கி இருப்பதால், கோவை தொகுதியை தங்களுக்கு சாதகமாக தொகுதியக அக்கட்சி நினைக்கிறது. திமுக தொகுதி பங்கீட்டில் தான் இந்த தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது முடிவாகும்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், பாஜக கட்டாயம் இந்த தொகுதியில் போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கு கோவை தொகுதியை வழங்குவதை வழக்கமாக கொண்ட அதிமுக, இந்த முறை நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
வேட்பாளர்கள் யார்?
கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லாததால், அக்கட்சியினரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. திமுகவின் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதால் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் போட்டியிடுவார். ஒருவேளை கோவை தொகுதி கிடைக்கவில்லை எனில், தென்சென்னை தொகுதிக்கு செல்வார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன் இரண்டு முறை எம்.பி. யாக இருந்து விட்டதால், அவரது கட்சி விதிப்படி மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது குறைவு. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவை பொருத்தவரை சீட் பெற பல முனை போட்டி நிலவுகிறது. கோவையை பாஜக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்ப்பதால், மக்களிடம் பிரபலமாக உள்ள ஒருவருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதேசமயம் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பவில்லை எனில், ஏ.பி. முருகானந்தத்திற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வானதி சீனிவாசனுக்கு தேசிய அரசியல் ஆர்வம் இருப்பதாலும், கமல்ஹாசன் போட்டியிட்டால் மீண்டும் தோற்கடித்து தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டுமென விரும்புவதாலும் அவருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் வலுவான வாக்கு வங்கியை கொண்ட அதிமுக, கோவை நாடாளுமன்ற தொகுதியில் நேரடியாக போட்டியிடுவது இது இரண்டாவது முறை தான். சீனியர்களுக்கு எஸ்.பி. வேலுமணி வாய்ப்பு தருவது சந்தேகம் என்பதால், அவரது ஆதரவாளர்களை களமிறக்கவே அதிக வாய்ப்புள்ளது. நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளருமான சந்திரசேகர், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் அல்லது முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி தலைவர் கந்தவேல் ஆகியோரில் ஒருவருக்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பலமுனை போட்டி நிலவினாலும், திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.