உதகை மலர்க்கண்காட்சி துவக்கம்; பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை கண்டு இரசிக்கும் சுற்றுலா பயணிகள்!
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர்க் கண்காட்சி இன்று துவங்கியது. மே 19 முதல் 23 வரையிலான 5 நாட்கள் மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட உள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
இந்தாண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் நடத்தப்படும் கோடை விழா இன்று துவங்கியுள்ளது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் 12 வது காய்கறிகள் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 6 ம் தேதியன்று துவங்கியது. இதையடுத்து மே 12 முதல் 14 ம் தேதி வரை கூடலூரில் 10 வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்பட்டது. மே 13 முதல் 15 ம் தேதி வரை உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை இலட்சக்கணக்கான பல்வேறு வெளிமாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு இரசித்தனர்.
இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர்க் கண்காட்சி இன்று துவங்கியது. இக்கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்தனர். மே 19 முதல் 23 வரையிலான 5 நாட்கள் மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தை கண்டறியப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாடப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய ஜான் சலீவனின் வாரிசுகளான ஓரியல் என் சலீவன் அலோன், ஜோசிலியன் மேரி ஸ்மித் ஆகியோர் லண்டனில் இருந்து வந்து இந்த மலர்க்கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த மலர்க்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 80 ஆயிரம் கார்னேசன் மலர்களைக் கொண்டு 40 அடி அகலத்தில் 18 அடி உயரத்தில் மயில் அலங்காரம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறுத்தை, டால்பின், பாண்டா கரடி, ஒற்றைக்கொம்பு கண்டாமிருகம், கடற்பசு போன்ற விலங்குகள் வடிவம், தமிழ் மரவன் பட்டாம்பூச்சி, மரகதப்புறா, பனைமரம், செங்காந்தள் மலர் போன்ற வடிவமைப்புகள் சுமார் 70 ஆயிரம் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 30 வகையான ஹெலிக்கோனியா கொய்மலர்கள், லில்லியம் மலர்கள், 35 ஆயிரம் மலர்த்தொட்டிகள், 125 நாடுகளின் தேசிய மலர்கள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மலர்க்கண்காட்சியில் பூத்துக்குலுங்கும் இலட்சக்கணக்கான மலர்களை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்து வருகின்றனர். மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்