வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்துகொண்ட கூட்டத்தில் பெண் மீது தாக்குதல்.. பாஜக நிகழ்வில் பரபரப்பு
கூடுவாஞ்சேரியில் பாஜக தேசிய மகளிரணி தலைவி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு
தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மீனாட்சி என்பவர் மீது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்ட தலைவர் பலராமன் அந்த பெண்ணை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் திரும்பி வந்த அப்பெண் மண்டபத்திற்குள் நின்று கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி கலந்துகொண்ட நிகழ்வில் பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் ABP செய்தியாளர் கேட்டபொழுது, சம்பவம் தொடர்பாக மாவட்ட தலைவரிடம் விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்தப் பெண்ணிடம், புகாரை மாவட்ட தலைவரிடம் கொடுக்குமாறு தெரிவித்ததாக கூறினார்.