Tiruvallur News: அம்பத்தூரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! கணவர் கண் முன்னே பெண் காவலர் மரணம்
அம்பத்தூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

இளம் பெண்ணுக்கு - பாலியல் சீண்டல்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் , ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வருகிறார். இளம் பெண்ணின் கணவர் இரவு வேலைக்கு சென்றுள்ளார். அதனால், வீட்டில் இளம் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது போதையில் இளம் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது.
வாலிபர் கடித்ததில் , இளம்பெண்ணின் வாய் மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அந்நேரம் இளம் பெண்ணின் கணவர் வீட்டிற்கு வர வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்து மீறிய பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ( வயது 22 ) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் இருவருக்கும் ஏற்கனவே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் , திடீரென கணவர் வீட்டிற்கு வந்ததால் வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. பின் போலீசார் ராஜ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கணவர் கண் முன்னே இறந்த பெண் காவலர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் , சோழம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் ( வயது 52 ) தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுமதி ( வயது 48 ) மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தம்பதிக்கு ஒரு மகனும் , மகளும் உள்ளனர். காலையில் தம்பதி இருவரும் , இருசக்கர வாகனத்தில் செங்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.
அம்பத்துார் கள்ளிக்குப்பம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது , பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் , இருவரும் சாலையில் துாக்கி வீசப்பட்டனர். அப்போது , பின்னால் வந்த லாரி சுமதி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயமடைந்த முருகேசனை , அங்கிருந்தவர்கள் மீட்டு , ஆம்புலன்ஸ் வாயிலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , சுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஆந்திர மாநிலம் , நாராயணவனம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுப்ரமணி ( வயது 34 ) என்பவரை கைது செய்தனர்.





















