திருவண்ணாமலையில் இதுவரை 6 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவிகளுக்கு கொரோனா உறுதி...!
’’தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்.1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதி’’
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் கடந்த ஆண்டு மத்திய பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது இதனடிப்படையில் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை கருத்துக்கணிப்புகளை நடத்தியது. பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது.
பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகளற்ற முழு முடக்கம் அமலானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை பள்ளியில் நடத்த உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு ஆசிரியர்கள் வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வகுப்பறைகளில் மாணவர்கள் இடையே போதிய இடைவெளியுடன் அமர வைப்பது, மதிய உணவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்பேரில் பள்ளிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவில் மேலராணி அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக ஊழியர் ஒருவர், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் 2 பேர், வாழ்விடந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், வழுதலங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள், மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர் என 11 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.