‘தலைகீழாக மாறும் ECR – திருவான்மியூர் டூ உத்தண்டி 15 நிமிஷம்தான்’ 2,100 கோடியில் உயர்மட்ட பாலம்..!
Thiruvanmiyur to Uthandi Elevated Corridor: " சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது"

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மிகப் பிரதான சாலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும், சென்னை புறநகர் பகுதியை இணைக்கக்கூடிய சாலையாகவும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுற்றிய பகுதிகளில், குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இது விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பல மடங்காக அதிகரிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையை தினமும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில், இது 2 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தீராத பிரச்சனை என்ன ?
ஏற்கனவே, இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2008 ஆம் ஆண்டு இது தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக ஆறு வழிச்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி சுங்கச்சாவடி வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலம் கையகப்படுத்தி மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்தின நெரிசல் குறையாது
16 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம் என்பதால் இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தாலும், போக்குவரத்து நெரிசல் என்பது குறையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம், நெடுஞ்சாலைத்துறை கோரிக்கை வைத்தது.
உயர்மட்ட மேம்பால சாலை
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே டைட்டில் பார்க் அருகே உள்ள எஸ். பி.சாலை முதல் கொட்டிவாக்கம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அதே இடத்திலிருந்து, உத்தண்டி சுங்கச்சாவடி வரை சுமார் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலையாக நீடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
15 நிமிடம் தான் பயணம்
இது திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் மூன்று இடங்களில், வாகனங்கள் வெளியேற வசதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு 2100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை செல்ல வேண்டுமென்றால், 1 மணி நேரம் வரை நேரம் செலவாகிறது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் போது இரண்டு மணி நேரம் வரை சில நேரங்களில் எடுத்துக் கொள்கிறது. இந்த மேம்பாலச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், 15 நிமிடத்தில் செல்ல முடியும், இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















