Electric Train : இது ஹேப்பி நியூஸ்..! தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது வழித்தடத்தில் பொங்கல் முதல் மின்சார ரயில்...!
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மூன்றாவது வழித்தடத்தில் பொங்கல் முதல் மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஆனால், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் செல்லும் வழித்தடம் சில இடங்களில் விரைவு ரயில்களின் பாதையாகவும் மாற்றப்பட்டு இயக்கப்படும். இதன்காரணமாக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்களின் போக்குவரத்து நேரம் அதிக இடைவெளியிலே இயக்கப்படும். இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் மூன்றாவது பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ரூபாய் 268 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. தாம்பரம் – கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு என்று மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் சிக்னல்கள், மின் இணைப்பு வழங்குதல், ரயில் நிலையங்களின் விரிவாக்க பணிகளும் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் சமீபத்தில் அதிவேக ரயில் என்ஜின்களை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான மூன்றாவது வழித்தடத்தில் வரும் ஜனவரி 14-ந் தேதியான தைப்பொங்கல் முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில்சேவை தொடங்கப்பட்ட பிறகு பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பொங்கல் தினம் முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்