பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் நீதிபதிகள் வேதனை.
குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இறுதியில் திரைப்படத்துறை துணை நடிகையாக இருந்த 16 வயது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, கைது மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் என்பவர் காவல்துறை தரப்பின் இருப்பு சாட்சி என்றும் அவரது சாட்சியத்தை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, குற்ற வழக்குகள் புலன் விசாரணையில் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது என்றும் பொதுநலனின் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக முன் வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையில் இருப்பு சாட்சி என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் தொடர்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது என்றும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலை மறைவு குற்றவாளியான சரவணன் தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார் என்பதும் மனுதாரர்கள் தங்கள் இச்சைக்காக சரவணனுக்கு இரையாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி , நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை மூன்று ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பனங்குடி, நரிமணம் மற்றும் கோபுராஜபுரம் கிராமங்களில் இருந்து சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த 2017ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாத நிலையில், விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தங்களது நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நிலம் வழங்கிய சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உரிய இழப்பீடு கோரி நாகூர் அருகே ஒரு மாத காலம் தொடர் போரட்டம் நடத்த அனுமதிக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, போரட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ஒரு மாத கால தொடர் போரட்டத்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நிலம் அளித்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என உறுதி தெரிவித்தார்.
இதையடுத்து, இழப்பீடு கோரிய வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்காமல், போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், இழப்பீடு கோரிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரை, தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், நீதியின் மீது நம்பிக்கை வைத்து, நாள் முழுவதும் சாமியானவுக்கு கீழ் அமர்ந்து சிரமப்படாமல், விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்