Premalatha Vijayakanth: கேப்டன் மீது என்ன வன்மம்... வதந்தி பரப்பாதீங்க.. கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Vijayakanth: கேப்டன் நன்றாக இருக்கிறார், நீங்கள் யாரும் கேப்டன் உடன் இல்லை. நான் தான் இருக்கிறேன்.2, 3 நாட்களில் நல்ல செய்தி வரும்” என பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கிப் பேசியுள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) நிவாரண பொருட்களை வழங்கினார்.
நிவாரணப் பொருட்கள் வழங்கிய பிரேமலதா
பால், உணவுப் பொட்டலங்கள், பெட்ஷீட் உள்ளிட்டவைகள் அடங்கிய நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பற்றி பேசும்போது பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார்.
“சிங்கப்பூருக்கு இணையான சென்னை சீரழிந்த சென்னை ஆக இருக்கிறது. எல்லா இடங்களிலும் சாக்கடை தண்ணீரும் மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக இருக்கின்றனர். பல இடங்களில் ஏரிகள் தூர்வாரப்படவில்லை.
எல்லா ஏரியும் முழுவதும் கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜனவரி பிப்ரவரி மாதங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. மக்கள் எப்போதும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருங்க வேண்டுமா? இது வருந்தத்தக்க விஷயம்.
சென்னை மேயர் பொய் பேசுகிறார்..
பல ஏரிகளில் தடுப்பணைகள் இல்லை. புழல் ஏரி உடைந்து விடும் நிலை உள்ளதை கேட்கும்போது மனம் பதைபதைக்கிறது. பல இடங்களிலும் மின்சாரம் இல்லை. பால் கிடைக்காமல் ரொம்ப கஷ்டம். மியாட் மருத்துவனை முழுவதும் தண்ணீரில் நிரம்பி இருக்கிறது.
ஒரு நாளுக்கு இந்த கூத்து. தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் என்ன நிலைமை? அரசுக்கு கேள்வி எழுப்புகிறேன். மருத்துவ வசதிகள் கூட இல்லை. ஒரு நாளில் சிட்டி மூழ்குகிறது. ஒரு நாள் மழைக்கு இப்படி என்றால் பத்து நாட்கள் மழை பெய்தால் என்ன நிலைமை என்ற கேள்வி அரசிற்கு முன் வைக்கிறேன்.
எந்த ஒரு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகளை இல்லாத சூழல் உள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் வாய் கூசாமல் பொய் பேசுகிறார்” என்றார்.
‘கேப்டன் மீது என்ன வன்மம்?’
தொடர்ந்து விஜயகாந்த் பற்றி பேசிய பிரேமலதா, “கேப்டன் நன்றாக இருக்கிறார். நீங்கள் யாரும் கேப்டன் உடன் இல்லை. நான் தான் இருக்கிறேன். ஏன் தொடர்ந்து வதந்தியை பரப்புகிறீர்கள். கேப்டனை பற்றி இந்த அளவுக்கு வன்மம் ஏன்?
தவறான செய்தியை போட வேண்டாம் பலமுறை உங்களிடன் கேட்டுக் கொண்டேன். கேப்டன் மீதும் எங்கள் மீதும் உங்களுக்கு என்ன வன்மம்? நல்லா இருக்கும் மனிதனை ஏன் இப்படி? அது எந்த அளவுக்கு பாதிக்கும்? ஊர் வாயை எப்படி மூட முடியும்?
இந்த நேரத்தில் ரஜினியின் வசனம் தான் நினைவிற்கு வருகிறது. குறைக்கிற நாயும் குறை சொல்லாத வாயும் இந்த உலகத்தில் இல்லை என்பதுதான் உண்மை. கேப்டனைப் பற்றி எப்போதும் தவறான செய்தியை போட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். கேப்டன் நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும். நானே சொல்கிறேன்” என்றார்.