PM Modi Speech: "வரலாறு, பாரம்பரியத்தின் இருப்பிடம்.. தேசிய, தேசபக்தி உணர்வின் மையம் தமிழ்நாடு" புகழாரம் சூடிய பிரதமர் மோடி..!
தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதுமே உற்சாகமும், மகிழ்ச்சியும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தார். நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
வளர்ச்சி திட்டங்கள்:
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனைய திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் தொடக்க விழா, ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பல திட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டின் ஜவுளித்துறைக்கு உதவும் வகையில் பிரதமரின் மித்ரா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலைய புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களால் சென்னை, மதுரை கோவை மக்கள் பயனடைவார்கள். பாரத் மாலா திட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை சாலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளபோது புதிய சக்தியாக புதிய திட்டங்கள் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. விமானம், ரயில், சாலை என பல கட்டமைப்பு திட்டங்கள் இங்கே தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்பு துறையில் புதிய புரட்சியை இந்தியா செய்து வருகிறது.
தமிழ் புத்தாண்டுக்கு புதிய உற்சாகம்:
கட்டமைப்பு முதலீட்டுக்காக 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ் புத்தாண்டுக்கு புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தேச பக்தி, தேச உணர்வின் மையம் தமிழ்நாடு. வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் இருப்பிடம் தமிழ்நாடு.
இந்தியாவில் தயாரிப்போம் என்பதில் இருக்கும் பெருமிதம் வ.உ.சி பூமியில் இயல்பான விஷயம். தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய ஊக்கியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
தரம் வாய்ந்த கட்டமைப்பு வேலைவாய்ப்பை உருவாக்கும். அது வருவாயை உருவாக்கும். அதனால் தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளர்கிறது உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி, வணக்கம்" என்றார்.
தமிழ்நாட்டில் 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியின்போது அடிக்கல் நாட்டினார். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி, 37 கி.மீ. தூர திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
பின்னர், மதுரை - செட்டிக்குளம் உயர்மட்ட பாலம், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்துள்ளார். திருமங்கலம் - வடுகப்பட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார்.