Marina Beach: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவசதி.. அழகை ரசிக்க இனி தடையில்லை
மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை அருகில் சென்று ரசிக்கும் நோக்கில், சென்னை மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சிறப்பு பாதையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
கடலின் அழகை ரசிப்பது என்றால் அனைவருக்கும் பிடித்தமானது தான். அதிகாலையிலும், மாலை வேளையிலும் கடல் அலைகள் ஓடி வந்து கால்களை தொட்டுச் செல்லும் வகையில், கடற்கரையில் பொடிநடையாய் நடந்து சென்றால் மனமடையும் பரவசத்திற்கு ஈடில்லை என்றே கூற வேண்டும். ஆனால், வாழ்வின் ஒப்பற்ற மகிழ்ச்சிகளில் ஒன்றான இந்த அனுபவம் அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி கடற்கரைக்கு வருவது என்பது எளிதான காரியமும் அல்ல. வாழ்நாள் முழுவதும் சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, கடலைகளை உணர்வது என்பது கிடைப்பதற்கரிய வரமாகவே உள்ளது.
சென்னையும், மெரினாவும்:
சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரது விருப்பப் பட்டியலிலும் கட்டாயமாக இருப்பது மெரினா கடற்கரை ஆகும். உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெருமைக்குரிய மெரினா கடற்கரை, வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே பிடித்தமான இடமாக உள்ளது. குறிப்பாக சென்னை மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தில் மெரினாவும் நீக்கமுடியா இடத்தை பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அவர்களும் கடல் அழகை ரசிக்கும் வகையில் மெரினா கடற்கரையில், சக்கர நாற்காலிகளை செலுத்தும் வகையில் சிறப்பு பாதை அமைக்கப்படுகிறது. ஆனால், தங்களுக்கு என சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சக்கர நாற்காலிகளுக்கான புதிய பாதை:
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்கரையில் அவர்களுக்கு என சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.1.14 கோடி செலவில் பாபூல், சிவப்பு மராந்தி மற்றும் பிரேசிலிய மரங்களால் ஆன, சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான புதிய பாதை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தம் இல்லம் அருகே சாலையில் இருந்து கடற்கரை வரையில் 263 மீ நீளம் மற்றும் 3மீ அகலத்துடன் இந்த பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகினை ரசிப்பதற்காக சிறப்பு சக்கர நாற்காலி வண்டி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி:
சென்னை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள, புதிய பிரத்யேக பாதை மாற்றுத்திறனாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இனி மற்றவர்களை போல தாங்களும் கடலுக்கு அருகில் சென்று அதன் பேரழகை ரசிக்க முடியும் எனவும், கடல் அலைகள் தங்களை தீண்டும் அந்த ஆனந்த அனுபவத்தை பெற முடியும் எனவும், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.